கென்யாவில் கனமழை, நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு

ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிப்பு
கென்யாவில் கனமழை, நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

நைரோபி: கென்யாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

கென்யாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள தாராகா நிதி, எல்கேயோ-மராக்வெட் மற்றும் கியாம்பு ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியான நிலச்சரிவுகள் பல குடும்பங்களை பாதித்துள்ளதுடன், ஏராளமானோர் தங்களது வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், பொதுக் கட்டமைப்பு வசதிகளும் சொத்துக்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை பேர் ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறித்த துல்லியமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

கென்யாவின் தலைநகரான நைரோபியில் சாலைகள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் காட்சிகள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், மழையினால் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், இது தங்களது வணிகத்தைப் பாதிப்பதாகவும் கூறி மாகோங்கனி மற்றும் ருவாய் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனமழையினால் நீர் மூலம் பரவும் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், நாடு முழுவதும் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள் சேதமடையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. கென்யாவில் கடந்த மார்ச் மாதத்தில் பெய்த மழையின்போது ஏற்பட்ட வெள்ளத்தில் 37 பேர் உயிரிழந்த நிலையில், தற்போதைய பாதிப்பு கடந்த இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும் இரண்டாவது பெரிய இயற்கைச் சீற்றமாகும். 

வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை பெய்யும் இந்த பருவகால மழை, மே மாதத்தின் முதல் பாதியில் உச்சத்தை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதத் தலையீடுகளால் ஏற்படும் காலநிலை மாற்றமே கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய தீவிர வானிலை மாற்றங்களுக்குக் காரணம் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கென்யாவில் கனமழை, நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு
பழம்பெரும் பாலிவுட் நடிகர் சுதேஷ் குமார் காலமானார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in