

பெர்லின்: ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான சாப், 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான ‘சாப்’ (SAP), செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் தனது முதலீடுகளை விரிவுபடுத்தும் நோக்கில், சுமார் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட சாப், நிறுவனங்களுக்கான மென்பொருள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் ஏற்கனவே ஒரு மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவித்த 3 ஆண்டுகளுக்குள் இந்நிறுவனம் மீண்டும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இந்தப் பணியிடக் குறைப்பு, நேரடி பணிநீக்கம், ஊழியர்கள் தாமாகவே பணியிலிருந்து விலகுவது மற்றும் விருப்ப ஓய்வு போன்ற பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து, சாப் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.
சாப் நிறுவனம் தனது பணியாளர் எண்ணிக்கையை குறைப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில், சுமார் 8 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், பணியிடங்களைக் குறைத்தாலும் அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள சில பிரிவுகளில் புதிய ஊழியர்களை சாப் தொடர்ந்து பணியமர்த்தி வருகிறது. இதனால், சில ஊழியர்கள் புதிய பொறுப்புகளுக்கு மாற்றப்படலாம். மற்றவர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படலாம்.