

ஜகார்த்தா: அரசுமுறைப் பயணமாக இந்தோனேசியாவுக்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் ஜகார்த்தாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார்.
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளில் பிரதமர் மோடி 6 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்ட அவர் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவை வந்தடைந்தார். பிரதமர் மோடியின் விமானம் இந்தோனேசிய வான்பரப்புக்குள் நுழைந்ததில் இருந்தே, இந்தோனேசிய விமானப் படையின் போர் விமானங்கள் பிரதமரின் விமானத்துக்கு பாதுகாப்பு அளித்தவாறு உடன் பறந்து வந்தன.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, ஜகார்த்தா விமான நிலையத்துக்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னை வரவேற்கும் விதமாக நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: ஜகார்த்தா வந்தடைந்தேன். விமான நிலையத்திலேயே என்னை அதிபர் பிரபோவோ வரவேற்றது மனதை நெகிழச் செய்தது. கடந்த 2018-ல் நாங்கள் எங்கள் உறவை மேம்படுத்தினோம். இது எங்கள் மக்களுக்குப் பயனளித்துள்ளது. இந்த பயணத்தில் பல்வேறு துறைகளில் இந்தக் கூட்டாண்மைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் நானும், அதிபர் பிரபோவோவும் ஆலோசனை மேற்கொள்வோம்.
அதிபர் பிரபோவோவும் நானும் யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் கோயில் வளாகத்தை பார்வையிட உள்ளோம். இது நமது நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான கலாச்சாரத் தொடர்புகளை உறுதி செய்யும். இந்தோனேசியாவில் இருக்கும்போது, இங்குள்ள இந்தியச் சமூகத்தினருடன் கலந்துரையாடவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இந்தோனேசியா இடையே ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 75-வது ஆண்டு நிறைவடையும் வேளையில் இப்பயணம் அமைவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான ‘விரிவான உத்திசார் கூட்டாண்மைக்கு’ இது கூடுதல் வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தனது இந்தோனேசியப் பயணத்தை நாளை (ஜூலை 8) முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸுடன் இணைந்து வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு, முக்கிய தாதுக்கள், தூய்மையான எரிசக்தி உள்ளிட்டவை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
அரசு அதிகாரிகள் உடனான சந்திப்புகள் தவிர, ஆஸ்திரேலிய தொழில் சமூகத்தினர் மற்றும் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
பிரதமர் மோடி தனது பயணத்தின் 3-ம் கட்டமாக நியூசிலாந்து செல்கிறார். இது பிரதமர் மோடியின் முதல் நியூசிலாந்து பயணமாகும். மேலும், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு செல்வது இதுவே முதல்முறை.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில், வர்த்தகம், விவசாயம், கல்வி, தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்பது குறித்தும், முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளார்.