

கோப்புப் படம்
இஸ்லாமாபாத்: அமெரிக்கா - ஈரான் இடையே 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகள் குறித்து பாகிஸ்தான் அமைச்சரும், பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதரும் இஸ்லாமாபாத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடுத்தன. ஈரானின் ராணுவ இலக்குகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தின. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்தது.
அதன்பின் 2 வாரங்களுக்கு முன்பு போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியது. அதன்படி நடைபெற்ற முதல் கட்ட பேச்சு வார்த்தை கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற்றது. ஆனால், முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது.
இந்நிலையில் 2 வார கால போர் நிறுத்தம் கடந்த புதன் கிழமை முடிந்தது. அமெரிக்கா - ஈரான் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்வதற்கான முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியது. இதனால் போர் நிறுத்தத்தைக் காலவரையறையின்றி நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே இந்த வார இறுதியில், 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொசின் நக்வி, பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் நடாலி பேக்கரை இஸ்லாமாபாத்தில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மேற்காசிய நிலவரம், 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தூதரக அளவிலான முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் ட்ரம் அறிவித்த போர் நிறுத்த நீட்டிப்பை, ‘வரவேற்கத்தக்க முன்னேற்றம்’ என நக்வி தெரிவித்தார். இருதரப்பு இடையே அமைதியான தீர்வு ஏற்பட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் அனைத்து முயற்சிகளும் எடுக்கின்றனர். இந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என தெரியவில்லை. எனினும், நல்ல செய்தி வரும். 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (வெள்ளி) நடைபெறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீன தூதர் சந்திப்பு: இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை, பாகிஸ்தானுக்கான சீன தூதர் ஜியாங் ஜைதாங் நேற்று சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் துணை பிரதமரும் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தர் உட்பட பலர் இருந்தனர். இந்தச் சந்திப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் கூறியதாவது: மேற்கு ஆசியா நிலவரம் குறித்து, பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகள் குறித்து சீன தூதர் ஜியாங் கேட்டறிந்தார்.
மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார். பாகிஸ்தான் - சீன உறவுகள் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருப்பது குறித்து பாகிஸ்தான் பிரதமர் திருப்தி தெரிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.