

வாஷிங்டன்: தமிழகத்தின் தஞ்சாவூரை பூர்விகமாகக் கொண்ட ஸ்ரீதர் வேம்பு (58), சென்னை ஐஐடி-யில் பயின்று உயர் கல்விக்காக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு கடந்த 1994-ல் பிஎச்டி பட்டம் பெற்றார். 1996-ல் கலிபோர்னியாவில் அட்வென்ட்நெட் நிறுவனத்தை தொடங்கினார். கடந்த 2009-ல் நிறுவனத்தின் பெயர் சோஹோ என்று மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த 1993-ம் ஆண்டில் பிரமிளா சீனிவாசனை, ஸ்ரீதர் வேம்பு திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2019-ல் தமிழ்நாட்டுக்கு ஸ்ரீதர் வேம்பு திரும்பினார். கடந்த 2021-ல் அவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரினார்.
இந்த வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரமிளா சீனிவாசனின் உரிமைகளைப் பாதுகாக்க ஸ்ரீதர் வேம்பு ரூ.15,000 கோடிக்கான பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்ரீதர் வேம்பு தொடங்கிய சோஹோ கார்ப்பரேசன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1.04 லட்சம் கோடி ஆகும். இந்த நிறுவனத்தில் தற்போது அவர் 5 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்கிறார். அவரது தங்கை ராதா வேம்பு 47.8%, தம்பி சேகர் வேம்பு 35.2%, டோனி தாமஸ் 8% பங்குகளை வைத்து உள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்ட விதிகளின்படி விவாகரத்து வழக்குகளில் ஒரு நபர் தனது சொத்தில் 50 சதவீதத்தை மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். இதன்படி ஸ்ரீதர் வேம்பு, சோஹோ கார்ப்பரேசன் நிறுவனத்தில் தனக்குள்ள பங்குகளில் 50 சதவீதத்தை மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்க முன்வந்துள்ளார். ஆனால் இதை அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் ஏற்கவில்லை. அவர் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள வாதத்தில், “சோஹோ நிறுவனத்தில் தர் வேம்புக்கு 88% பங்குகள் உள்ளன. அதில் தனக்கு 50% வழங்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு ரூ.15,000 கோடிக்கான பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.