பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.7,000: ஈரான் எல்லை மூடப்பட்டு உள்ளதால் விநியோகம் கடும் பாதிப்பு

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.7,000: ஈரான் எல்லை மூடப்பட்டு உள்ளதால் விநியோகம் கடும் பாதிப்பு
Updated on: 
1 min read

இஸ்லாமாபாத்: ஈரான் எல்லை மூடப்பட்டதால், பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சிலிண்டர் விலை ரூ.7,000 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தான் – ஈரான் இடையிலான காப்ட் – ரிம்தான் மற்றும் டஃப்தான் ஆகிய எல்லைச் சோதனைச் சாவடிகள் கடந்த 17-ம் தேதி மூடப்பட்டன. இதற்கான காரணங்கள் குறித்து இரு நாடுகளும் வெவ்வேறு விளக்கங்களை அளித்துள்ளன. இதன்படி, இந்த எல்லைச் சோதனைச் சாவடிகள் அமைந்துள்ள பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண அரசு, பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் கடத்தலைத் தடுப்பதற்கும் தற்காலிகமாக எல்லைகள் மூடப்பட்டதாகத் தெரிவித்தது.

அதேநேரத்தில், தொழில் நுட்பக் கோளாறுகள் காரணமாக எல்லை மூடப்பட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானிலிருந்து நாள்தோறும் சுமார் 7,000 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) பாகிஸ்தானுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், எல்லை மூடப்பட்டுள்ளதால் பாகிஸ் தானில் எல்பிஜி விநியோகம் தடைபட்டு, எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, குவாதர் வர்த்தக மற்றும் தொழில் துறைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஷம்சுல் ஹக் கூறுகையில், ‘‘பாகிஸ்தான் நாள்தோறும் ஈரானிலிருந்து சுமார் 7,000 மெட்ரிக் டன் எல்பிஜியை இறக்குமதி செய்கிறது.

விநியோகத்தில் பாதிப்பு

இந்நிலையில், எல்லை மூடப்பட்டது எரிவாயு விநி யோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காப்ட் – ரிம்தான் எல்லைச் சோதனைச் சாவடி வழியாக மட்டுமே நாள்தோறும் 4,000 டன்னுக்கும் அதிகமான எல்பிஜி பாகிஸ்தானுக்குள் கொண்டு வரப்படுகிறது. இந்த இறக்குமதி தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், 12 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.4,500-ல் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

விநியோகத் தடைகள் தொடர்ந்து நீடித்தால் விலை மேலும் உயரக்கூடும். எல்லை மூடப்பட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான சரக்குப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் உள்பட நூற்றுக்கணக்கான லாரிகள் எல்லையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டு உள்ளன’’ என்றார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி டெஹ்ரானுக்குச் சென்று, ஈரான் தலைவர்களுடன் எல்லைப் பிரச்சினைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.7,000: ஈரான் எல்லை மூடப்பட்டு உள்ளதால் விநியோகம் கடும் பாதிப்பு
எல்லையில் சீன ராணுவத்துடன் மோதலா? - இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in