

பெய்ஜிங்: ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் பாதுகாப்பையும், தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஈரான் அரசுக்கு முதன்முறையாக சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக் சியுடன் புதன்கிழமை தொலைபேசியில் உரையாடிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறியுள்ளதாவது: தற்போதைய சூழல் மோதலுக்கும் அமைதிக்கும் இடையிலான ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
அமைதிக்கான ஒரு வாய்ப்பு தற்போது தென்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியின் கடற்கரை நாடான ஈரானின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், சர்வதேச கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். அந்த வழித்தடத்தில் இயல்பு நிலை திரும்புவதே சர்வதேச சமூகத்தின் பொதுவான விருப்பமாகும். இவ்வாறு வாங் யீ கூறினார்.
ஈரான்-அமெரிக்க மோதல் தொடங்கிய பிறகு, இந்த வழித்தடம் குறித்து சீனா இத்தகைய நேரடி கோரிக்கையை முன்வைப்பது இதுவே முதல்முறை. இதற்குப் பதிலளித்த ஈரானிய அமைச்சர் அப்பாஸ் அராக் சி, “பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட சீனா முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.
மேலும்,பேச்சுவார்த்தை மூலம் யதார்த்தமான தீர்வை எட்ட ஈரான் தயாராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, இஸ்லாமாபாத்தில் நடந்த முதற்கட்டப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து அமெரிக்கா விதித்த கடல்வழித் தடையை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை “ஆபத்தானது” என்று சீன வெளியுறவுத் துறை சாடியுள்ளது.