

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.
பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கு இடையே 2-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறாததை தொடர்ந்து, ஈரான் இந்த அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது. போர் நிறுத்தம், ஹார்முஸ் ஜலசந்தியின் மேலாண்மை, அணுசக்தி விவகாரம் ஆகியவற்றை மையமாக வைத்து இந்தத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டம்: ஈரான் மற்றும் லெபனான் மீது போர் தொடுக்கப்படாது என்பதற்கும், போர் முழுமையாக நிறுத்தப்படுவதற்கும் அமெரிக்கா முறையான உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இரண்டாம் கட்டம்: முதற்கட்ட நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே, சர்வதேச கடல் வழிப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி நிர்வாகம் மற்றும் மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்படும்.
மூன்றாம் கட்டம்: மேற்கண்ட இரு நிலைகளும் வெற்றிகரமாகக் கடந்த பின்னரே, அணுசக்தி விவகாரம் குறித்து ஈரான் விவாதிக்கும். ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்டகால கோரிக்கை இதில் அடங்கும். அமெரிக்காவின் எதிர்வினை ஈரானின் இந்த முன்மொழிவு குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ் கூறுகையில், "இவை மிகவும் நுணுக்கமான ராஜதந்திர விவகாரங்கள்.
பத்திரிகைகள் வாயிலாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது. அமெரிக்க மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம். ஈரான் அணு ஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். 4 மடங்கு தாக்குதல் ஈரான் துணை அதிபர் இஸ்மாயில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.
எங்கள் கணக்கு வித்தியாசமானது. எங்களின் ஒரு எண்ணெய் கிணறு பற்றி எரிந்தால், அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகளில் 4 எண்ணெய் கிணறுகள் பற்றி எரியும்’’ என்று பதிவிட்டுள்ளார்.