லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை தொடங்க ஆளும் தொழிலாளர் கட்சியை அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த 2024-ம் ஆண்டில் நடைபெற்ற பிரிட்டிஷ் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதே ஆண்டு ஜூலை 5-ம் தேதி அந்த கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரதமராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு அமெரிக்காவுக்கான பிரிட்டிஷ் தூதராக பீட்டர் மண்டல்சனை நியமித்தார்.
எப்ஸ்டீன் கோப்புகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த பிப்ரவரியில் பீட்டர் கைது செய்யப்பட்டார். அப்போது பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிராக ஆளும் கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் தேர்தலின்போது பிரிட்டிஷ் பொருளாதாரத்தை வலுப்படுத்துவேன் என்று தொழிலாளர் கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால் ஸ்டார்மர் ஆட்சியில் பிரிட்டனின் பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டவில்லை. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையிலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.
பிரதமர் ஸ்டார்மரின் ஆட்சி நிர்வாகத்தை எதிர்த்து சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்டீரிட்டிங், பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர். தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது.
இவை உள்ளிட்ட காரணங்களால் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் நேற்று பதவி விலகினார். தலைநகர் லண்டனில் உள்ள இல்லத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது தலைமை குறித்து தொழிலாளர் கட்சியில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. எனவே தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுகிறேன்.
புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 9-ம் தேதி தொடங்கும். கடைசி நாள் ஜூலை 16. செப்டம்பரில் நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய பிரதமர் பர்ன்ஹாம்?
பிரிட்டனின் புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் ஆன்டி பர்ன்ஹாம் முன்னணியில் உள்ளார். அவரது ஆதரவாளர் ஜோஸ் சைமன்ஸ் அண்மையில் மேக்கர்பீல்டு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆன்டி பர்ன்ஹாம் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.