

கோப்புப்படம்
ரோம்: ஐரோப்பிய நாடான இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியோ மெலோனி தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வருகிறது.
அந்த நாட்டில் 5.88 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் 74.5% பேர் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனர். 15.3% பேருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இதர கிறிஸ்தவ பிரிவுகளை சேர்ந்த 4.1 சதவீதம் பேர், முஸ்லிம்கள் 3.7% பேர், இதர மதங்களை சேர்ந்த 2.2% பேர் வசிக்கின்றனர்.
கடந்த செப்டம்பரில் பிரதமர் மெலோனி கூறும்போது, “பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிவதற்கு தடை விதிக்கப்படும். இது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை ஆகும். ஒரு பெண் அல்லது ஒரு சிறுமி முகத்தை மறைக்க கட்டாயப்படுத்துவது அவரது அடிப்படை உரிமைகளை மீறும் செயல்” என்றார்.
இதைத் தொடர்ந்து பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிய தடை விதிக்கும் சட்ட மசோதா இத்தாலி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின்படி இத்தாலி பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறினால் 1,000 யூரோக்கள் வரை (ரூ.1 லட்சம்) அபராதம் விதிக்கப்படும். புதிய நடைமுறை வரும் 2027-28-ம் கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது.