

ஃபிளை துபாய் விமானத்தைக் கடத்தி நாச வேலையில் ஈடுபட முயன்ற துணை பைலட்டின் புகைப்படம் மற்றும் அவரைப் பற்றிய தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது. தற்போது, அவரைப் பற்றிய முழு தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துபாய் நகரில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ‘ஃபிளை துபாய்’ விமானத்தை ஓமனைச் சேர்ந்த துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி கடத்த முயன்றார். இந்திய பைலட் ஸ்மித் மச்சார், துணை பைலட் உடன் தீரத்துடன் போராடி விமான கடத்தலை வெற்றிகரமாக முறியடித்தார்.
துணை பைலட் தாக்கியதில் வலது கை துண்டிக்கப்படும் நிலையில் இருந்த மச்சார், பைலட் அறையைத் திறந்துவிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு 4 இஸ்ரேல் பயணிகள் பைலட் அறைக்குள் புகுந்து துணை பைலட்டை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து சவுதி அரேபிய போலீஸார், ஓமனைச் சேர்ந்த துணை பைலட் அல் ஹமாமியை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஐக்கிய அரபு அமீரக அரசிடம் துணை பைலட் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். அந்த நாட்டின் சிறப்பு புலனாய்வுக் குழு, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பைலட் ஸ்மித்தை, துணை பைலட் ஹமாம் கத்தியால் குத்தியதாக முதலில் தகவல்கள் வந்தன. ஆனால், காக்பிட்டில் (பைலட்கள் அறை) இருந்த அவசரகால கோடாரியால் (crash axe) பைலட் ஸ்மித்தை, துணை பைலட் தாக்கியிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வணிக ரீதியான விமானத்திலும் அவசரகால கோடாரி (crash axe) இருப்பது கட்டாயமாகும். விபத்துகள் போன்ற அவசரச் சூழல்களில் பயன்படுத்துவதற்காக இது பைலட்களின் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டிருக்கும்.
இந்தக் கோடாரியைப் பயன்படுத்தி துணை பைலட், இந்திய பைலட்டான கேப்டன் ஸ்மித் மச்சாரை, "தீவிரவாதத் தாக்குதல்" பாணியில் தாக்கியதாக யுஏஇ அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று உறுதிப்படுத்தி உள்ளனர்.
முன்னதாக, இந்தக் கோடாரிகள் பயணிகள் இருக்கும் பகுதியில் (கேபினில்) வைக்கப்பட்டிருந்தன. ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த 9/11 தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு அவை காக்பிட்களுக்கு மாற்றப்பட்டன.
மேலும், இந்த விவகாரத்தில் துணை பைலட் தனியாகச் செயல்பட்டாரா அல்லது ஏதேனும் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா என்பதைக் கண்டறிய தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தீவிரவாத பின்னணியால் ஓமனில் விமானம் ஓட்ட தடை விதிக்கப்பட்டவர்
சர்வதேச ஊடகங்களில் கூறியிருப்பதாவது: ஃபிளை துபாய் விமானத்தில் துணை பைலட்டாக பணியாற்றியவர் பெயர் ஹமாம் அல்ஹமாமி. ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த இவரது தந்தை ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், தாய் சிரியாவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
பைலட் அல்ஹமாமி தனது பெரும்பாலான நேரத்தை ஓமனுக்கு வெளியே, குறிப்பாக, சிரியாவில் கழித்துள்ளார். அங்கு அவர் தீவிரவாதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுள்ளார். ஓமன் ஏர் விமான நிறுவனத்தில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். துணை பைலட் பயிற்சியாளராக பணியாற்றியபோது, அவரிடம் தீவிரவாதக் கருத்துகள் தொடர்பான பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும், தொடர்ந்து அந்த விமான நிறுவனத்தில் நிர்வாகப் பணியில் அவர் பணியாற்ற அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தலாக அடையாளம் காணப்பட்டதால், விமானம் ஓட்ட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட ஃபிளை துபாய் விமான நிறுவனத்தில் அவர் பணியமர்த்தப்பட்டார். அவருடைய பின்னணியை ஆராயாமல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேலை இணைக்கும் முக்கியமான விமானப் பாதையில் அவருக்கு விமானம் இயக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஃபிளை துபாய் விமான சம்பவத்துக்குப் பிறகு சுமார் 9 மணி நேரத்துக்குள் துணை பைலட்டின் சமூகவலைதள கணக்கில் இரண்டு பதிவுகள் வெளியிடப்பட்டன. இரண்டும் தீவிரவாதம் தொடர்பானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பதிவில் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் காக்பிட்களில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பல காணொலி காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதில் ஒரு காணொலியின் இறுதியில், ஒசாமா பின்லேடனுக்குப் பிறகு அல்-காய்தா அமைப்பின் தலைவராக இருந்த அய்மான் அல்-ஜவாஹிரி மற்றும் 2009-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 9 பேரைக் கொன்ற தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட ஹுமாம் கலீல், அபு-முலால் அல்-பலாவி ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
மற்றொரு பதிவில், இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களான மெக்கா, மதீனா மற்றும் ஜெருசலேம் ஆகியவற்றை சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படம் இடம் பெற்றிருந்தன. அதன் பின்னணியில், அவமானத்தை நிராகரிப்பது, மரணத்துக்கு அஞ்சாதிருப்பது மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பது குறித்து கவிதை இடம் பெற்றிருந்தது. அல்ஹமாமியின் தற்போது நீக்கப்பட்ட எக்ஸ் வலைதள கணக்கில் அவர் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், ஓமன் ஏர் விமான நிறுவனத்தில் விமானம் ஓட்ட தடை விதிக்கப்பட்ட நிலையில், அவரை ஃபிளை துபாய் நிறுவனம் எப்படி பணியமர்த்தியது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஃபிளை துபாய் நிறுவனம் அலட்சியமாக இருந்ததாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தார்
துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி பிரிட்டனில் உள்ள பக்கிங் ஹாம்ஷையர் நியூ பல்கலைக்கழகத்தில் விமானப் போக்குவரத்து மேலாண்மையும், ஆஸ்திரேலியாவில் பொறியியலும் பயின்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஒரு பதிவில், திருமணம் செய்யும் பெண் முகத்தை மறைக்கும் ‘நிகாப்’ அணிய வேண்டும் என்றும், திருமணத்துக்குப் பிறகு வேலைக்குச் செல்லக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றும் பணிச்சூழல் பெண்களை ‘சீரழிக்கிறது’ என்ற கருத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
எனினும், இந்த சமூக வலைதளக் கணக்குகள் உண்மையில் ஹமாம் அல்-ஹமாமிக்குச் சொந்தமானவையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், அந்தப் பதிவுகளை அவரே வெளியிட்டாரா, வேறு யாராவது அவரது கணக்கைப் பயன்படுத்தினார்களா அல்லது அவை முன்கூட்டியே பதிவிடத் திட்டமிடப்பட்டிருந்தனவா என்பதும் தெளிவாகவில்லை.