‘ஃபிளை துபாய்’ விமானத்தை கடத்த முயற்சி செய்தது திட்டமிட்ட தீவிரவாத செயல்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

‘ஃபிளை துபாய்’ விமானத்தை கடத்த முயற்சி செய்தது திட்டமிட்ட தீவிரவாத செயல்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
Updated on: 
2 min read

“ஃபிளை துபாய்" விமானத்தை கடத்த முயற்சி செய்தது, திட்டமிட்ட தீவிரவாத செயல் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

கடந்த 30-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துபாய் நகரில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ‘ஃபிளை துபாய்’ விமானத்தை ஓமனைச் சேர்ந்த துணை பைலட் கடத்த முயன்றார். இந்திய பைலட் ஸ்மித் மச்சார், துணை பைலட் உடன் தீரத்துடன் போராடி விமான கடத்தலை வெற்றிகரமாக முறியடித்தார்.

விமானத்தில் சாதாரண பயணிகளாக பயணம் செய்த இரு பைலட்கள் ஃபிளை துபாய் விமானத்தை சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பத்திரமாக தரையிறக்கினர். சவுதி அரேபிய போலீஸார், ஓமனைச் சேர்ந்த துணை பைலட்டை கைது செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக அரசிடம் துணை பைலட் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். அந்த நாட்டின் சிறப்பு புலனாய்வுக் குழு, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபரின் ஆலோசகர் அன்வர் கார்கேஷ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

“ஃபிளை துபாய்" விமானத்தை கடத்த முயற்சி செய்தது, திட்டமிட்ட தீவிரவாத செயல். இந்திய பைலட் ஸ்மித் மச்சார் 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி உள்ளார். அவரது கடமை உணர்வு, அவரை கதாநாயகனாக மாற்றி உள்ளது. மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல், பேரழிவை மச்சார் தடுத்து நிறுத்தி உள்ளார். வீரம், கடமையின் மறுபெயராக அவர் உருவெடுத்திருக்கிறார். தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். இவ்வாறு அன்வர் கார்கேஷ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிதியோன் சாஆர் கூறும்போது, “விமான கடத்தல் முயற்சியின் பின்னணியில் மிகப்பெரிய தீவிரவாத சதி இருப்பதாக சந்தேகிக்கிறோம். ஓமனை சேர்ந்த துணை பைலட்டை இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும்" என்று தெரிவித்தார்.

உரிய விலை கொடுக்க நேரிடும்..

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: முதல்கட்ட விசாரணையில், ஓமனைச் சேர்ந்த துணை பைலட் தீவிரவாத சிந்தனை கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. ஃபிளை துபாய் விமானத்தில் பயணிகள் அவரை மடக்கிப் பிடித்தபோது, என்னை கொன்றுவிடுங்கள் என்று உரக்க கூறியுள்ளார். இதன்மூலம் அவரது தற்கொலை முடிவு தெளிவாக புரிகிறது. விமான கடத்தலில் ஈரானுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை இப்போதைக்கு கூற முடியாது.

ஓமன் துணை பைலட்டை யார் அனுப்பி இருந்தாலும் அதற்கான விலையை கொடுக்க நேரிடும். விமான கடத்தல் முயற்சிக்கு பின்னால் இருக்கும் நபர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்கப்படும். விமானத்தை மோதி பயணிகள் அனைவரையும் கொலை செய்ய துணை பைலட் திட்டமிட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு நெதன்யாகு தெரிவித்தார்.

‘ஃபிளை துபாய்’ விமானத்தை கடத்த முயற்சி செய்தது திட்டமிட்ட தீவிரவாத செயல்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
‘ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது’ - பைலட் ஸ்மித் உடன் பேசிய பிரதமர் மோடி புகழாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in