

லண்டன்: பிரிட்டனின் 59-வது பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் நேற்று பதவியேற்றார். இவர் கடந்த 10 ஆண்டுகளில் பொறுப்பேற்கும் 7-வது பிரதமர் ஆவார்.
பிரிட்டனில் கடந்த 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பதவியேற்றார். 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பதவியேற்ற ஸ்டார்மர் கடந்த 2 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டார்மர் கடந்த ஜூன் 22-ம் தேதி அறிவித்தார்.
இதையடுத்து நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராகவும் பிரதமராகவும் 56 வயதான ஆன்டி பர்ன்ஹாம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கெய்ர் ஸ்டார்மர் மன்னர் சார்லஸை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். இதையடுத்து புதிய அரசை அமைக்குமாறு மன்னர் சார்லஸ் விடுத்த அழைப்பை பர்ன்ஹாம் முறைப்படி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் பிரிட்டனின் 59-வது பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
வடக்கின் ராஜா என்ற செல்லமாக அழைக்கப்படும் பர்ன்ஹாம் ஏற்கெனவே கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பணியாற்றியுள்ளார். பிரதமராக பர்ன்ஹாம் பதவியேற்ற பிறகு அவர் தனது முதல் உரையில் பிரிட்டனுக்கு ஒரு புதிய பாதையைவகுக்க இருப்பதாகவும் வாழ்க்கைச் செலவுகளை எளிதாக்குவதிலும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதிலும் கவனம் செலுத்தவுள்ளதாக கூறினார்.