

வாஷிங்டன்: அமெரிக்க போர் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் தப்பிய விமானப்படை வீரர் 2 நாட்களுக்குப்பின் மீட்கப்பட்டார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க போர் விமானம் எப்-15 ஈகிள் கடந்த வெள்ளிக் கிழமை சென்றது. இந்த விமானத்தை வான் தாக்குதல் ஏவுகணை மூலம் ஈரான் ராணுவம் சுட்டது. அப்போது அந்த போர் விமானத்தின் விமானி மற்றும் ஆயுதங்களை இயக்கும் வீரர் ஆகியோர் போர் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் தப்பினர். இதில் விமானியை அமெரிக்க ராணுவத்தின் மீட்பு படை உடனடியாக சென்று மீட்டது.
மற்றொரு விமானப்படை வீரரை தேடும் பணி 2 நாட்களாக தொடர்ந்தது. இவரைப் பிடிக்கும் ஈரான் மக்களுக்கு 66,000 அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது. காயங்களுடன் தப்பித்த விமானப்படை வீரர், ஈரான் ராணுவத்தினர் மற்றும் பொது மக்களிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள மலைப் பகுதிக்குள் சென்று மறைந்தார். அங்கிருந்தபடி அவர் தனது இருப்பிடம் குறித்து அமெரிக்க ராணுவத்துக்கு சிக்னல் அனுப்பினார்.
இதையடுத்து ஈரானில் அமெரிக்க விமானப்படை வீரர் மறைந்திருந்த பகுதிக்கு நள்ளிரவில் அமெரிக்க போர் விமானங்கள். ஹெலிகாப்டர்கள், வீரர்கள் ஆயுதங்களுடன் சென்றனர். அமெரிக்க போர் விமானங்களை பார்த்ததும் அந்த இடத்தை நோக்கி ஈரான் ராணுவத்தினர் வாகனங்களில் விரைந்தனர். போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.
ஆனால் அமெரிக்கப் படையினர் குண்டுகளை சரமாரியாக வீசி அமெரிக்க விமானப்படை வீரர் பதுங்கியிருந்த இடத்தை ஈரான் வீரர்கள் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டனர். அதன்பின் அமெரிக்க விமானப்படையின் ஹெலிகாப்டர் தரையிறங்கி படுகாயத்துடன் மறைந்திருந்த விமானப்படை வீரரை மீட்டு வந்தனர். இந்த மிகப் பெரிய ஆபரேஷனில் அமெரிக்க வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை.
இத்தகவலை நேற்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: எனது உத்தரவின் பேரில், பல ரக போர் விமானங்களை, மிக சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் அனுப்பியதால் இந்த அற்புதமான மீட்பு பணி சாத்தியமானது. காயம் அடைந்த விமானப்படை வீரர் நலமுடன் உள்ளார். ஈரானின் ஏவுகணை அச்சுறுத்தல் உள்ள பகுதிக்குள் ஊடுருவி இந்த தேடுதல் மற்றும் மீட்பு பணி நடைபெற்றது.
எதிரி நாட்டுக்குள் விழுந்த இரண்டு அமெரிக்க விமானிகள் மீட்கப்பட்டது இதுவே முதல் முறை. ஒரு வீரர் கூட கொல்லப்படாமல் அல்லது காயம் அடையாமல் இந்த மீட்பு பணியை எதிரி நாட்டுக்குள் புகுந்து வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம். இது ஈரான் வான் பகுதியில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு மற்றொரு உதாரணம்.
இது அமெரிக்கர்கள் அனைவரும் பெருமைப்படும் தருணம். உலக ராணுவ வரலாற்றிலேயே மிகச் சிறந்த ராணுவத்தை நாம் வைத்துள்ளோம். அமெரிக்காவையும், அமெரிக்க ராணுவத்தினரையும் கடவுள் ஆசிர்வதிப்பார். அனைவருக்கும் மகிழ்ச்சியான ஈஸ்டர் தின வாழ்த்துக்கள். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறினார்.
ஈரானுக்குள் பதுங்கியிருந்த விமானப்படை வீரரை மீட்க அமெரிக்க விமானப்படை தி சிகார்ஸ்கை எச்எச்-60டபிள்யூ ‘ஜோலி க்ரீன் -2’ மீட்பு ஹெலிகாப்டர்கள், பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் ஏ-10 வார்தாக் போர் விமானங்கள், எச்சி-130 மீட்பு டேங்கர் விமானம், எப்-35 போர் விமானங்களை பயன்படுத்தியது.
இவற்றில் தி சிகார்ஸ்கை எச்எச்-60 டபிள்யூ ‘ஜோலி க்ரீன் -2’ அமெரிக்க விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட மீட்பு ஹெலிகாப்டர் ஆகும். இது இந்த மீட்பு படையில் இடம்பெற்ற மிகவும் சக்தி வாய்ந்த ஹெலிகாப்டர். இதில் உள்ள ஆயுதங்கள் மூலம் தரையிறங்கும்போதே எதிரிகளின் மீது தாக்குதல் நடத்த முடியும். இந்த விமானங்களுடன் சிறப்பு அதிரடிப்படை வீரர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த மீட்பு பணியின் போது ஏ-10 வார்தாக் போர் விமானங்கள் வானில் பறந்த படியே வான் பாதுகாப்பை அளித்தன. பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் மீட்பு பகுதியில் தாக்குதல் நடத்திய ஈரான் ராணுவத்தினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
5 வீரர்களை கொன்றதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு
மீட்பு பணிக்காக அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் இஸ்பஹான் பகுதிக்கு வந்தபோது அவற்றின் மீது தாக்குதல் நடத்தியதில் சி-130 ரக விமானம், 2 பிளாக்ஹாக் ரகஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், 5 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ஈரான் ராணுவம் கூறியுள்ளது. ஹெலிகாப்டர் மீது தாக்குதல் மீட்பு பணியின் போது அமெரிக்காவின் பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்களை ஈரான் ராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.
சேதமடைந்த ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டதாகவும், பாதிப்புக்குள்ளான ஹெலிகாப்டர் ஈரான் ராணுவத்தின் கைகளில் சிக்காமல் இருக்க, வானிலேயே வெடிவைத்து தகர்க்கப்பட்டதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பொய் தகவல் ஈரானுக்குள் மாயமான அமெரிக்க விமானப் படை வீரரை கண்டுபிடிக்கும் முன்பாக அவரை ஏற்கெனவே கண்டுபிடித்து விட்டதாகவும், அவரை ஈரானிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஈரானுக்கு அமெரிக்க உளவுத் துறை சிஐஏ சார்பில் தவறாக வழிநடத்தும் தகவல் பரப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஈரான் ராணுவத்தினர் மற்றும் மக்களின் கவனத்தை திசை திருப்பி இந்த மீட்புப்பணியை அமெரிக்கா மேற்கொண்டது. அமெரிக்க வீரர் சிக்கியிருந்தால், பிணைக்கைதியாக பிடித்து பல நிபந்தனைகளை ஈரான் நடத்தி யிருக்கும் என்று சிஐஏ கூறியுள்ளது.