

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு அடியாலா சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான் சிறையில் கொலை செய்யப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து அடியாலா சிறை வளாகத்தில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டனர்.
இம்ரான் கானை பார்க்க வேண்டும் என்று அவர்கள் சிறை வளாகத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி சிறையில் இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகள் நோரின் நியாஸி, அலீமா கான், உஸ்மா கான் ஆகியோரும் வந்தனர். ஆனால், இம்ரானை சந்திக்க அவர்களுக்கு போலீஸாரும் சிறை நிர்வாகத்தினரும் அனுமதி தரவில்லை.
இந்த நிலையில் இம்ரான் கான் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு அடியாலா சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இம்ரான் கான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவருக்கு முழுமையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடியாலா சிறையிலிருந்து அவர் மாற்றப்பட்டதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.