

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி முயற்சி மேற்கொண்டுள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 604 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
காஸாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய எதிர் தாக்குதலில் 29 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவுக்குச் சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சமே சுக்ரியை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார். பின்னர், அரபு லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் நபில் எலாரபியை சந்தித்தார்.
எகிப்து தரப்பில் போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த வாரம் சமரச திட்டம் முன்வைக்கப்பட்டது. அதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டபோதும், ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் தாக்குதல்
இதற்கிடையே காஸாவில் உள்ள மருத்துவமனை ஒன்றை இஸ்ரேல் விமானப்படை கடந்த திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது. அதில், 5 பேர் உயரிழந்தனர். டாக்டர்கள் உள்பட 70 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக இஸ்ரேல்ராணுவம் தரப்பில் கூறப்பட்டதாவது: “அந்த மருத்துவமனை அருகே ஹமாஸ் இயக்கத்தினர் வைத்திருந்த ஏவுகணைகளை குறிவைத்துத்தான் தாக்குதல் நடத்தினோம்” என்றனர்.
இதுதவிர, காஸாவின் மத்திய பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.
இதுபோன்று பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் பீரங்கிப் படையும், விமானப் படையும் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் பலர் உயிரிழந்தனர். இதுவரை 604 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3,640 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேபோன்று இஸ்ரேல் தரப்பில் திங்கள்கிழமை மட்டும் 9 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. ஒரு வீரரை காணவில்லை என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
1 லட்சம் பேர் இடம்பெயர்வு
போரில் பாதிக்கப்பட்ட காஸா பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து இதுவரை ஒரு லட்சம் பாலஸ்தீனர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண அமைப்பிடம் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காஸாவில் உள்ள வீடுகள், மருத்துவமனைகள், மசூதிகளில் ஹமாஸ் இயக்கத்தினர் பதுங்கியிருந்து தங்களின் தாக்குதலை மேற்கொள்கின்றனர். எனவே, அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலில் பொதுமக்களும் கொல்லப்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
ஹமாஸ் இயக்கத்தினர், இஸ்ரேல் மீது திங்கள்கிழமை மட்டும் 131 ராக்கெட் குண்டுகளை வீசியுள்ளனர். அவற்றில் 108 குண்டுகள் இஸ்ரேல் பகுதியை தாக்கியது. 17 குண்டுகளை இடைமறித்து தாக்கி அழித்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.