Published : 05 Oct 2017 09:24 AM
Last Updated : 05 Oct 2017 09:24 AM

உலக மசாலா: மலைப்பாம்பை வென்ற வீரருக்கு வாழ்த்துகள்!

இந்தோனேசியாவைச் சேர்ந்த 37 வயது ராபர்ட் நபாபன் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது, சாலையில் 23 அடி நீள மலைப்பாம்பிடம் சிக்கிக்கொண்டார். மலைப்பாம்பு ராபர்ட்டை தாக்கத் தொடங்கியது. ராபர்ட்டும் எதிர் தாக்குதலை நிகழ்த்தினார். உடல் முழுவதும் காயப்பட்டாலும் ராபர்ட் நம்பிக்கையை இழக்கவில்லை. கடினமாகப் போராடினார். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு மலைப்பாம்பு இறந்துவிட்டது. அந்த வழியே வந்த மக்கள் ராபர்ட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். “அது என் கையைக் கடித்துவிட்டது. மலைப்பாம்புடன் போராடியதும் உயிர் பிழைத்ததும் ஆச்சரியமாக இருக்கிறது. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்திருந்தால் மலைப்பாம்பின் வயிற்றுக்குள்தான் இருந்திருப்பேன். என் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவத்தை நான் கேள்விப்படவில்லை. உயிர் பிழைத்தாலும் காயங்கள் சரியாக நாட்களாகும்” என்கிறார் ராபர்ட். இறந்துபோன மலைப்பாம்பு கிராமத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பெரியவர்கள் வேடிக்கை பார்க்க, குழந்தைகள் மலைப்பாம்பைப் பிடித்து விளையாடுகிறார்கள்.

மலைப்பாம்பை வென்ற வீரருக்கு வாழ்த்துகள்!

கொ

சுவை விரட்டும் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்திருக்கிறது. தென் கொரியாவைச் சேர்ந்த எல்ஜி நிறுவனம், உலகின் முதல் கொசு விரட்டி ஸ்மார்ட்போனை (LG K7i) அறிமுகம் செய்திருக்கிறது. இது மீயொலி அலைகள் (Ultrasonic sound waves) மூலம் ரத்தம் உறிஞ்ச வரும் கொசுக்களை விரட்டுகிறது. கொசுக்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் உதவும் என்கிறார்கள். எல்ஜியின் தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டிகளில் கொசு விரட்டும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருக்கிறது. ரசாயனங்கள் மூலம் கொசுக்களை விரட்டுவதற்கான தேவை இல்லாமல் போய்விட்டது. ஸ்மார்ட்போனுடன் ஒரு ஸ்டாண்ட்டும் வழங்கப்படுகிறது. கொசுக்கள் இருக்கும் இடங்களில் ஸ்மார்ட்போனை ஸ்டாண்டில் வைத்து, ஆன் செய்தால் கொசுக்கள் ஓடிவிடுகின்றன. மனிதர்களுக்கு எந்த விதத்திலும் தொல்லை தராத, பாதுகாப்பான ஸ்மார்ட்போன் இது. விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். எதிர்காலத்தில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த கொசு கட்டுப்பாட்டு அமைப்பு 15 ஆண்டுகளாக செய்த பரிசோதனைகளின்படி, இதுபோன்ற சாதனங்கள் நீண்ட காலம் வேலை செய்வதில்லை என்று அறிவித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் நடத்திய பரிசோதனையில் 72% கொசுக்கள் ஸ்மார்ட்போன் மூலம் விரட்டப்பட்டிருக்கின்றன என்கிறது எல்ஜி நிறுவனம். கொசுக்களை விரட்ட இந்தியர்கள் பல்லாயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறார்கள். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் சிறப்பாக வேலை செய்தால் மக்கள் பிரச்சினை தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொசுவை விரட்டும் ஸ்மார்ட்போனுக்கு வெல்கம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x