Published : 04 Oct 2017 08:15 AM
Last Updated : 04 Oct 2017 08:15 AM

10 சூட்கேஸ்களில் 17 துப்பாக்கிகள்...: லாஸ் வேகாஸ் ஹோட்டலின் 32-வது மாடியில் மறைந்திருந்த கொலையாளி

கொலையாளி ஸ்டீபன் படாக்குக்கு 64 வயதாகிறது. நெவடாவில் கோல்ஃப், டென்னிஸ் கோர்ட் என அனைத்து வசதிகளும் கொண்ட குடியிருப்பில் இருந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அவர் மிகப் பெரிய பணக்காரர். சமீபத்தில் தனது 90 வயதான தாய்க்கு வாக்கர் பரிசளித்துள்ளார். சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸில் அளவுக்கு அதிகமாக பணம் வைத்து சூதாட்டம் ஆடுவது இவருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

மாண்டாலே பே ஹோட்டலின் 32-வது மாடியில் 17 துப்பாக்கிகளோடு இவர் ஏன் தங்கினார், திடீரென ஏன் துப்பாக்கியால் சுட்டார் என்பது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. இதுவரை இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்கிறார்கள் போலீஸ் தரப்பில். ஆனால், 10 சூட்கேஸ்களில் துப்பாக்கிகளை மறைத்து, 32-வது மாடிக்கு எடுத்துச் சென்றதைப் பார்த்தால், பல நாட்களாகவே இதுபோன்ற தாக்குதலுக்குத் திட்டமிட்டிருக்கலாம் என்கிறார்கள் போலீஸார்.

என்னால் இதை நம்பவே முடியவில்லை என்கிறார் ஸ்டீபனின் தம்பி எரிக். ஸ்டீபன் யாரோடும் நெருங்கி பழக மாட்டார். எந்த மதமும் கிடையாது. அரசியலிலும் அவருக்கு ஈடுபாடு கிடையாது. ஆனால் பணம் ஏகத்துக்கும் அவரிடம் இருந்தது. சொகுசு படகுகளில் உல்லாசப் பயணம் போவார். சூதாட்டம் ஆடுவார். அவரிடம் பேசியே 2 மாதம் ஆகிறது என்கிறார் எரிக்.

கடைசியாக 2 வாரம் முன்பு, தனது தாய்க்கு வாக்கர் தேவைப்படுவதாக அறிந்ததும், அதை வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார் ஸ்டீபன். ஒரு முறை, சூதாட்டத்தில் 40 ஆயிரம் டாலர் பரிசு வென்றதாக எனக்கு குறுந்தகவல் அனுப்பினார். தோற்கும்போது அதைப் பற்றி தகவல் எதுவும் சொல்வதில்லை. ஆனால் கடன் இருப்பதாகத் தெரியவில்லை. பல கோடிக்கு அதிபதி ஸ்டீபன். ரியல் எஸ்டேட் தொழிலில் நன்றாக சம்பாதித்தார். சில சொத்துகள் இருவர் பெயரிலும் இருக்கின்றன.

மெஸ்கியூட்டில் உள்ள ஸ்டீபனின் வீட்டை போலீஸார் சோதனையிட்டனர். அவர் அங்கு தனது 62 வயது தோழியுடன் தங்கியிருந்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது, தோழி வெளிநாட்டுக்குப் போயிருந்தார். இதுவரை நடந்த சோதனையில், விசாரணையில் ஸ்டீபன் கொடூரமான கொலையாளி போல் தெரியவில்லை. அவர் மனஉளைச்சலில் இருந்ததாகவும் தெரியவில்லை. 64 வயதில் இப்படிப்பட்ட கொடூரமான கொலைகளை செய்வார்களா? ஆனால் பல நாட்கள் திட்டமிட்டு இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்கிறார் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் முன்னாள் அதிகாரி கிளின்ட் வான் ஷாண்ட்.

துப்பாக்கிகளில் சிலவற்றில் டெலஸ்கோப் பொருத்தப்பட்டு இருந்தது. செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளில் மாற்றம் செய்யப்பட்டு அவை முழு ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளாக மாற்றப்பட்டிருந்தன. செமி துப்பாக்கிகளில் ஒவ்வொரு முறையும் டிரிக்கரை அழுத்த வேண்டும். ஆனால் முழு ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளில் ஒரு முறை டிரிக்கரை அழுத்தினால் போதும் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருக்கும்.

தான் என்ன செய்யப்போகிறோம் என்பது ஸ்டீபனுக்கு தெரிந்திருக்கிறது. எப்படி செய்யப் போகிறோம் என்பதும் தெரியும். எல்லாம் செய்துவிட்டு தப்பிச் செல்லும் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை என்கிறார் வான் ஷாண்ட்.

ஸ்டீபன் மீது இதுவரை எந்தப் புகாரும் இல்லை. ஆனால் அவர் தந்தை மீது வங்கியை கொள்ளையடித்த புகார் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர். வங்கிக் கொள்ளைக்காக தந்தை பெஞ்சமின் கைது செய்யப்பட்ட போது, ஸ்டீபனுக்கு வயது 7 தான். அது 1960-ம் ஆண்டு. எஃப்பிஐ ஏஜெண்டுகள் வீட்டை சோதனை செய்தபோது, பக்கத்து வீட்டுக்காரர் ஸ்டீபனை வெளியே அழைத்துச் சென்று விட்டார்.

இதனால் தன் தந்தை கொள்ளைக்காரன் என்பது பல நாள் ஸ்டீபனுக்குத் தெரியாது. அவன் அப்பாதான் அப்படி. ஸ்டீபன் மிகவும் நல்ல பையன்தான் என்கிறார் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஈவா பிரைஸ்.

சிறையில் இருந்தபோது காவலாளிகளை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார் பெஞ்சமின். ஒரேகானில் போலி பெயரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பிறகு அவரைக் கண்டுபிடித்த போலீஸார் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். 1998-ல் அவர் மரணமடைந்தார்.

ஸ்டீபனுக்கு சொந்தமாக 3 வீடுகள் உள்ளன. இரண்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். இரண்டு முறை விவாகரத்து செய்திருக்கிறார். 1980-ல் ஒருமுறை, 1990-ல் ஒருமுறை. முன்னாள் மனைவிகளில் ஒருவர் தெற்கு கலிபோர்னியாவில் இருக்கிறார். அவர் வீடு முன்பும் நிருபர்கள் குவிந்துள்ளனர். ஆனால் அவர்களிடம் பேச அவர் மறுத்துவிட்டார்.

துப்பாக்கிச் சூடு நடந்தது எப்படி..?

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரம். திங்கள்கிழமை இரவு பாடகர் ஜாசன் அல்டீன் கிடார் இசையை ரசித்துக் கொண்டிருந்தது கூட்டம். 22 ஆயிரம் ரசிகர்கள். சரியாக 10.07 மணி. முதல் துப்பாக்கிக் குண்டு வெளியேறிய நேரம். மண்டலாய் பே ரிசார்ட் ஹோட்டலின் 32-வது மாடியில் இருந்து தோட்டாக்கள் பறக்க ஆரம்பித்தன. தொடர்ந்து 2 மணி நேரம் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. ஆரம்பத்தில் இதை வாண வேடிக்கை என்றுதான் நினைத்தார்கள். ஒவ்வொருவராக செத்து மடியவும், பிறகுதான் கூட்டம் கலைய ஆரம்பித்தது. மொத்தம் 59 பேர் மரணத்தை தழுவினார்கள். 527 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகவும் மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுதான்.

முதல் எச்சரிக்கை டாக்ஸி டிரைவர்களுக்குத்தான் வந்தது. அவர்களின் நீல ஸ்கிரீனில், மண்டலாய் ஹோட்டல் இருக்கும் தெருப் பக்கம் போக வேண்டாம். அங்கே துப்பாக்கிச் சூடு நடக்கிறது என்ற எச்சரிக்கை வந்தது. ஆனால் அதற்குள் பலர் பலியாகி விட்டனர். அதன்பிறகுதான் போலீஸார் எச்சரிக்கை வந்தது. துப்பாக்கிச் சூடு ஆரம்பித்து 90 நிமிடங்கள் கழிந்த பிறகும், மக்களை தரையில் படுக்குமாறும், ஒளிந்து கொள்ளுமாறும் போலீஸார் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x