பிரதமர் மோடி, அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு
பிரதமர் மோடி, அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு

ஜப்பான் பத்திரிகைகள் முழுவதும் மோடி - ஜெலன்ஸ்கி செய்திகள்

Published on

ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற ஜி-7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். அப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. அதன்பிறகு போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். ‘‘இது போருக்கான காலம் அல்ல. வளர்ச்சிக்கான நேரம். எனவே, இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும்’’ என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அதன்பின் ஜி-7 மாநாட்டில் முதல் முறையாக பிரதமர் மோடி - ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ‘‘ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் ஒரு அமைதி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இந்தியாவும் உதவி செய்ய வேண்டும்’’ என்று பிரதமர் மோடியிடம் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். அதற்கு, உக்ரைன் - ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்கிறேன் என்று ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

இந்நிலையில், ஜப்பான் பத்திரிகைகள் அனைத்திலும் பிரதமர் மோடி - அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு பற்றிய செய்திகள்தான் நேற்று ஆக்கிரமித்திருந்தன. இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தை, அவர்கள் ட்விட்டரில் வெளியிட்ட கருத்துகள் அனைத்துக்கும் ஜப்பான் பத்திரிகைகள் முக்கியத்துவம் தந்து வெளியிட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in