

அதிபர் ஒபாமா அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா வரும்போது, அவரை நாடாளுமன்றத்தில் பேச அழைக்கவேண்டும் என்று 3 எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தின் தலைமைக்கு எம்.பி.க்கள் பிராட் ஷெர்மன், டெட் போ, எனி பாலியோமவேகா ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில்,
"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்கா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுடனான நமது உறவின் முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக, அவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கடிதத்தில், “மிகப்பெரிய ஜனநாயக நடவடிக்கையை இந்தியா சமீபத்தில் மேற்கொண்டது. சுமார் 55 கோடிக்கும் அதிகமான மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். பல்வேறு மதத்தினரையும் அரவணைத்து செல்லுதல், தனிமனித சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, தேர்தல் ஜனநாயகம் என அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாகும். இதனால் இரு நாடுகளும் பயன் பெறும். உலகின் முக்கியமான பகுதியில் ஒரு பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் ஒவ்வொரு பத்தாண்டிலும் இந்திய பிரதமர்கள் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்கள். இந்த முறை மோடியை உரையாற்ற அழைப்பதன் மூலம் நமது பாரம்பரியத்தை தொடர வேண்டும்” என்று கூறியுள்ளனர்