பாஜகவை வேவு பார்த்த அமெரிக்க என்.எஸ்.ஏ.

பாஜகவை வேவு பார்த்த அமெரிக்க என்.எஸ்.ஏ.
Updated on
1 min read

அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு ஏஜென்சி (என்.எஸ்.ஏ.) பாரதிய ஜனதா கட்சியை ரகசியமாக வேவு பார்த்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளை என்.எஸ்.ஏ. அமைப்பு பல ஆண்டுகளாக வேவு பார்த்து வருவதை அதன் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் கடந்த ஆண்டு அம்பலப்படுத்தினார். அந்த வரிசையில் இந்திய அரசியல் நிலவரம், விண்வெளி ஆராய்ச்சிகள், அணுசக்தி திட்டங்கள், பொருளாதார கொள்கை முடிவுகள் என பல கோடி தகவல்களை என்.எஸ்.ஏ. ரகசியமாக திருடியிருப்பதை ஸ்னோடென் ஏற்கெனவே ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் எட்வர்ட் ஸ்னோடென்னை மேற்கோள் காட்டி அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவின் பிரதான கட்சியான பாஜகவை என்.எஸ்.ஏ. அமைப்பு ரகசியமாக உளவு பார்த்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவின் வெளிநாட்டு புலனாய்வு கண்காணிப்பு நீதிமன்றத்தில் 2010-ம் ஆண்டில் என்.எஸ்.ஏ. முறைப்படி அனுமதி பெற்றுள்ளது.

பாஜக தவிர லெபனானின் அமல் கட்சி, வெனிசூலாவின் பொலிவேரிய கான்டினென்டல் கூட்டமைப்பு, எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி, எகிப்தின் தேசிய விடுதலை முன்னணி, பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவற்றின் செயல்பாடுகளையும் என்.எஸ்.ஏ. வேவு பார்த்துள்ளது.

அமெரிக்காவின் நம்பகமான நட்பு நாடுகளான பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உளவு பார்க்க மட்டும் என்.எஸ்.ஏ.வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவை தவிர சுமார் 193 நாடுகளில் வேவுப் பணிகளை அந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது.

மேலும் உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம், ஐரோப்பிய யூனியன், சர்வதேச அணுசக்தி முகமை ஆகியவற்றின் செயல்பாடுகளையும் என்.எஸ்.ஏ. ரகசியமாகக் கண்காணித்ததாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in