

அமெரிக்க வாழ் இந்திய மருத்துவர் ஒருவர் சட்டத்திற்குப் புறம்பாக மருந்துகளைப் பரிந்துரை செய்த காரணத்தால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் உடல்ரீதியான பிரச்சினைகளால் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்நாட்டு நீதிமன்றம் அந்த மருத்துவரைக் கைது செய்துள்ளது.
அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர் நிவேதிதா மொஹந்தி (56). இவர் ஸ்டான்ஃபோர்டு மருத்துவமனையில் முன்னாள் தலைமை மருத்துவராக இருந்தார். அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்தது, சுகாதாரத்துறையில் ஊழல்களைத் தூண்டியது மற்றும் உதவியது மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர் மீது 45 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இவர் சுமார் 100 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறார். 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விர்ஜினியா மருத்துவ வாரியம் நிவேதிதாவின் மருத்துவப் பணி உரிமத்தை மூன்றாண்டுகளுக்கு இடைநிறுத்தியது. தன்னுடைய உரிமத்தை சமர்ப்பித்த பிறகும் எந்த ஒரு மருத்துவக் காரணங்களுக்காகவும் அல்லாமல், பணத்திற்காக மட்டும் தன்னிடம் வருகிற நோயாளிகளுக்கு அதிக அளவுகளில் தடைசெய்யப்பட்ட மருந்துகளை வழங்கி வந்தார். மேலும், தன்னுடைய பரிந்துரைகளைக் கொண்டு நோயாளிகள் மோசடி வழியில் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெறுவார்கள் என்று தெரிந்தும் பரிந்துரைகளைச் செய்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் கிடைத்த பணத்தைக் கொண்டு நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய 32,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.20 லட்சம்) விலையுள்ள வீட்டில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார். இவர் மீதுள்ள குற்றங்கள் நிரூபணமானால் குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.