

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 1999ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் தொடர்புடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
மலேசிய அரசின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக் காரணமாக இந்த 4 பேரையும் கிளாங் பள்ளத்தாக்கில் நேற்று கைது செய்ததாக மலேசிய போலீஸ் தெரிவித்துள்ளது.
தங்களுடைய நடவடிக்கைகளுக்கு மலேசியாவை புகலிடமாக இந்த 4 பேரும் கருதியிருந்ததாக ஏஜென்சி தகவல்கள் கூறுகின்றன.
இது பற்றி மலேசியக் காவல்துறை தலைமை ஆய்வாளர் கலீத் அபு பக்கர் கூறுகையில், 4 பேரில் ஒருவர் 1999ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வருபவர் என்றும் மற்ற மூவரில் ஒரு நபர் அகதிகளுக்கான ஐநா தலைமைத் தூதர் அடையாள அட்டையை வைத்திருந்தார் என்றும் ஆனால் அவர் விடுதலைப்புலிகளின் வெடிகுண்டு நிபுணர் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஒருவர் சென்னை மற்றும் பெங்களூருவில் அயல்நாட்டுத் தூதரகங்களைத் தாக்கும் சதித் திட்டங்களில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் என்றும், இதே நபர் போலி பயண ஆவணங்கள் மற்றும் மாணவர்களுக்கான பாஸ்கள் ஆகியவற்றைப் பயன் படுத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர் என்றும் தலைமை ஆய்வாளர் அபு பக்கர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.