

காஸாவில் வீடுகளை இழந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பள்ளி மீது, பீரங்கி மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இதில் பள்ளியில் தங்கியிருந்த 13 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில், தற்காலிக போர் நிறுத்த நேரம் முடிவடைந்தது முதல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்கின்றன.
இந்த நிலையில் இன்று காலை தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்த பொது மக்கள், ஐ. நா. பள்ளி வளாகமான ஜபாளியா அகதிகள் முகாம் மீது அதிகாலை 4 மணி அளவில் பீரங்கி மூலம் குண்டுகள் வீசப்பட்டன.
இந்தத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் குண்டு மழை போல இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த செய்தியாளர் ஒருவர் விவரித்துள்ளார்.
முன்னதாக, நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் காஸா பகுதியின் ஒரே மின் நிலையமும் தகர்க்கப்பட்டதற்கு பின்னர், தொடர்ச்சியாக இரவு முழுக்க நடத்தப்பட்ட தாக்குதலில் 32 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 8-ஆம் தேதி முதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட, பாலஸ்தீன பொது மக்களின் எண்ணிக்கை 1,200 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 7000 மக்கள் காயமடைந்துள்ளதாகவும் ஐ நா தகவல் வெளியிட்டுள்ளது.