

இப்போது உள்ள எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தி முறையை மாற்றி அமைக்காவிட்டால் 2040-ம் ஆண்டு வாக்கில் உலகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. டென்மார்க் நாட்டின் ஆர்ஹஸ் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் வெர்மன்ட் சட்ட பள்ளி மற்றும் சிஎன்ஏ (கடற்படை பகுப்பாய்வு மையம்) கார்ப்பரேஷன் ஆகிய வற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வை மேற்கொண்டனர்.
இவர்கள் பிரான்ஸ், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 4 வெவ்வேறு வகையான பகுப்பாய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து ஆர்ஹஸ் பல் கலைக்கழக பேராசிரியர் பெஞ் சமின் சொவகூல் கூறியதாவது:
குடிநீர் மற்றும் எரிசக்தி தேவைக்கு நடுவே கடுமையான போட்டி நிலவுகிறது. பெரும்பாலான நாடுகளில் மின் உற்பத்திக்கு மிக முக்கிய மூலப்பொருளாக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படு வதற்கு கூலர்கள் தேவைப்படுவதே இதற்கு முக்கியக் காரணம்.
எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறோம் என்பதைக் கூட மின் உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்கள் அறிந்திருக்க வில்லை. பருவநிலை மாற்றம் காரணமாக தண்ணீர் வளம் குறைந்து வரும் நிலையில் மின் உற்பத்தித் துறையினர் பெரும் பகுதி தண்ணீரை எடுத்துக்கொண்டால், 2020-ல் வாக்கில் உலகில் உள்ள 30 முதல் 40 சதவீத நாடுகளில் சுத்தமாக குடிநீர் கிடைக்காது. இந்த நிலை நீடித்தால் வரும் 2040-ம் ஆண்டு வாக்கில் உலகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.
எனவே, எதிர்காலத்தில் தண்ணீரை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை உடனடியாக ஆலோசித்து முடிவெடுக்க வேண் டும். குறிப்பாக, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்துவதா, அல்லது குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும். இரண்டுக்கும் தேவை யான தண்ணீர் வளம் நம்மிடம் இல்லை.
இதற்குத் தீர்வாக மின் உற்பத் திக்கான பழைய முறையை மாற்றியமைக்க வேண்டும். குறிப்பாக, கூலிங் முறை தேவைப்படாத மின் உற்பத்தி முறைகளான காற்றும் மற்றும் சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.