நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் தீ

நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் தீ
Updated on
1 min read

காத்மாண்டு: நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ காத்மாண்டுவிலிருந்து போயிங் 576 எனும் விமானம் நேற்றிரவு 150 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. அப்போது, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் இன்ஜின் பகுதியில் தீப்பிடித்தது. விமானத்தில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானம் தரையிறங்கத் தயாரானது. எனினும் தீயை அணைக்க எடுக்கப்பட்ட முதற்கட்ட முயற்சியில் முழுமையாக தீ அணைக்கப்பட்டதால் விமானம் தரையிறக்கப்படாமல் துபாய் சென்றடைந்தது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையில் பறவை மோதியதன் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து நேபாள விமானத் துறை தரப்பில், “ தீ விபத்து சிக்கலை சந்தித்த பின்னர் விமானம் அதன் இயந்திரத்தை சிறிது நேரம் அணைத்துவிட்டது, பின்னர் எந்தவித பிரச்சினையும் இன்றி போயிங் 576 தனது பயணத்தை மேற்கொண்டது" என்று தெரிவித்துள்ளது. இந்த விமான விபத்தினால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று நேபாள விமானத் துறை விளக்கம் அளித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in