

தெற்காசியாவில் ஜிகாதிகளின் எழுச்சிக்கு அமெரிக்காவும் ஒருவகையில் காரணமாக உள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமத் ஆசிஃப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆசியா குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமத் ஆசிஃப் பேசும்போது, "ஆசியாவில் வளர்ந்து வரும் தீவிரவாதத்துக்கு பாகிஸ்தானை மட்டும் குற்றம் சுமத்த முடியாது. தெற்காசியாவில் ஜிகாதிகள் எழுச்சி பெற்றதற்கு அமெரிக்காவும் ஒருவகையில் காரணமாக உள்ளது. இது ஒரு கூட்டு சதி.
பாகிஸ்தானை அமெரிக்கா அதன் ஆதாயங்களுக்காக பயன்படுத்திவிட்டு பின்னர் அகற்றிவிட்டது.
ரஷ்யாவுடனான போரில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உறுதுணையாக இருந்தது. ஆனால் தவறான முடிவு என்று தற்போது நினைக்கிறோம். நாங்கள் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்டோம்.
உண்மையில் சொல்லப் போனால் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கான பாகிஸ்தானின் நடவடிக்கையை அமெரிக்கா குறைத்து வருகிறது. சன்னி, ஷியா, கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என அனைவரும் ஒன்றாக பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர்.
தற்போது தங்களது அடையாளங்களை பாதுகாப்பதற்காக மக்கள் தங்கள் பெயர்களை மாற்றிக் கொள்கின்றனர். இது ஒரு துயர சம்பவம் இதற்காக எங்களை குறைசொல்லாதீர்கள். வேதனையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.