Published : 21 Apr 2023 06:43 AM
Last Updated : 21 Apr 2023 06:43 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமராக, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த சவுத்ரி அன்வருல் ஹக் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமராக, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ‘பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் (பிடிஐ)’ கட்சியை சேர்ந்த சர்தார் தன்வீர் இலியாஸ் கான் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, “நீதித்துறையால் அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. தடை உத்தரவுகள் மூலம் அரசின் செயல்பாடுகளில் நீதித்துறை குறுக்கிடுகிறது” என விமர்சனம் செய்தார்.
இது தொடர்பாக சர்தார் தன்வீருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். எனினும் இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை. அவரை தகுதியிழப்பு செய்து பிராந்திய உயர் நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால் பிரதமர் பதவி காலியானது. தன்வீரின் மேல்முறையீட்டு மனு, பின்னர் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் பிடிஐ கட்சி எம்.பி.யும், சபாநாயகராக பதவிவகித்தவருமான சவுத்ரி அன்வருல் ஹக் நேற்று அந்தப் பிராந்தியத்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிடிஐ மட்டுமின்றி, பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் உள்ளிட்ட கட்சிகளும் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களின் (48) ஆதரவுடன் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT