

இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தில் மனிதக் கேடயங்களாகக் குழந்தைகள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், அந்த இயக்கத்தில் உள்ள பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
ஆயுதப் போராட்டத்தில் குழந்தைகள் என்ற தலைப்பில் ஐ.நா.வின் பொதுச் செயலாளர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
மாவோயிஸ்ட் இயக்கத்தில் ஆறு வயதான குழந்தைகள் கூட போராளிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் காவலர்களுடனான சண்டைகளின்போது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்தக் குழந்தைகளில் பலர் கொல்லப்படுவது மட்டுமின்றி உடலளவில் ஊனமுற்றும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
ஐ.நா.விடம் இந்தியாவில் இத்தகைய குழந்தைப் போராளிகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது குறித்துத் துல்லியமான தரவுகள் எதுவும் இல்லையென்றாலும், சுமார் 2,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் நக்சல் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் குழந்தைப் போராளிகளாக இருக்கலாம் என்று கருதுகிறது.
இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, பிஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் சிறுவர் ஆயுதப்படைப் பிரிவுகளான 'பால் தஸ்தா' மற்றும் 'பால சங்கம்' ஆகியவற்றில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் குழந்தைப் போராளிகளாக நியமிக்கப்படுகின்றனர்.
மேலும், இந்த இயக்கத்தில் இருந்து விலகிய முன்னாள் நக்சலைட் பெண்களில் சிலரின் வாக்குமூலங்களின் அடிப்படையில், பல நக்சலைட் முகாம்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடப்பதாகத் தெரியவந்துள்ளது.
இவ்வாறு குழந்தைகளை ஆயுதப் போராட்டங்களுக்குப் பயன்படுத்துவதைச் சட்டப்பூர்வமான குற்றமாக அறிவிக்க வேண்டும். என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.