மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தில் விசாரணைக் குழுவுக்கு முழு அனுமதி: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து வலியுறுத்தல்

மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தில் விசாரணைக் குழுவுக்கு முழு அனுமதி: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து வலியுறுத்தல்
Updated on
1 min read

கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் சர்வதேச விசாரணைக் குழுவுக்கு முழுமையான அனுமதி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நாடுகள் வரிசையில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்துடன் அமெரிக்காவும் இணைந்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட்டுடன் ஒபாமா பேசும்போது, இந்த விவகாரத்தை ஆஸ்திரேலியா முன்னெடுத்துச் செல்வதற்கு நன்றி தெரிவித்தார்.

விமானம் நொறுங்கி விழுந்த இடத்துக்கு விசாரணைக் குழுவை அனுப்பவும், தேவைப்பட்டால் போலீஸ் அதிகாரிகளை அனுப்பவும் ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்துள்ளதற்கு ஒபாமா பாராட்டு தெரிவித்தார். இந்த விவகாரத்தில் விரைவான, முழுமையான, தடையற்ற, வெளிப்படையான சர்வதேச விசாரணை அவசியம் என்பதை இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். சம்பவ இடத்தில் சர்வதேச விசாரணைக் குழுவுக்கு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாடுகள் இல்லாத முழுமையான அனுமதி தரவேண்டும் என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட்டேவுடன் ஒபாமா பேசும்போது, “விமானம் நொறுங்கி விழுந்த இடம் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும், விமானத்தின் எஞ்சிய பாகங்களை மலேசியாவிடம் ஒப்படைக்க வேண்டும், முழுமையான, தடையற்ற, வெளிப்படையான சர்வதேச விசாரணை தொடங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

கிழக்கு உக்ரைனில் பதற்றத்தை தணிப்பதற்கு பதிலாக கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா தொடர்ந்து ஆயுத உதவி அளிப்பதற்கு அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உடல்கள் நெதர்லாந்து வந்து சேர்ந்தன

இறந்தவர்களின் உடல்கள் கொண்ட மேலும் 2 ராணுவ விமானங்கள் வியாழக்கிழமை நெதர்லாந்து வந்து சேர்ந்தன. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 17-ம் தேதி கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களின் உடல்கள் கொண்ட முதல் விமானம் கடந்த புதன்கிழமை நெதர்லாந்து வந்து சேர்ந்தது.

இந்நிலையில் 74 உடல்களுடன் மேலும் 2 விமானங்கள் வியாழக்கிழமை நெதர்லாந்து வந்துசேர்ந்தன. இந்நிலையில் விமானம் நொறுங்கி விழுந்த இடத்துக்கு ஐ.நா. குழுவை அனுப்பும் முயற்சியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் உக்ரைன் அரசுடன் பேசி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in