

வாஷிங்டன்: பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஒருவாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதிய கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
இதனிடையே பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இண்டர்நேஷனல் எகனாமிக்ஸ் (பிஐஐஇ) தலைவர் ஆதம் எஸ் போஸன் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் அளித்த பதில். பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். உலகளவில் அதிக முஸ்லிம்களைக் கொண்ட 2-வது நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் வன்முறைக்கு ஆளாவதாக மேற்கத்திய நாடுகள் தவறான தகவலை பரப்பி வருகின்றன. அதில் உண்மையில்லை.
1947-ல் இருந்ததை காட்டிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. மாறாக பாகிஸ்தானில்தான் சிறுபான்மையினரின் நிலை கவலைக்குரியதாக மாறியுள்ளது. சிறுபான்மையினர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், மரண தண்டனை கூட விதிக்கப்படுகிறது.
பிரிவினையின்போது பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடாக அறிவித்தது. அப்போது,சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் உறுதியளித்தது. ஆனால், அதற்கு நேரெதிரான வகையில் தற்போது பாகிஸ்தானின் செயல்பாடு அமைந்துள்ளது. அங்குள்ள சிறுபான்மையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களுக்கு உரிய மதிப்பளிக்கப்பட்டு அவர்கள் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவதுடன் அவர்களின் வாழ்க்கைதரமும் மேம்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.