Published : 28 Sep 2017 10:48 AM
Last Updated : 28 Sep 2017 10:48 AM

உலக மசாலா: விவாகரத்துக்கு பரீட்சை வைக்கும் நீதிமன்றம்!

ணவன், மனைவி இருவருக்கும் உடன்பாடு இல்லாவிட்டால் விவாகரத்து கிடைப்பது எளிதான காரியம் அல்ல. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யிபின் மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு விவாகரத்து விண்ணப்பம் வழங்கப்படுவதில்லை. நீதிபதி வாங் ஷியு இந்தத் தேர்வு முறையைக் கொண்டு வந்திருக்கிறார். தற்போது அதிக எண்ணிக்கையிலான ஜோடிகள் விவாகரத்து கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு போதுமான அவகாசம் கொடுத்து, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்க எண்ணினார் வாங் ஷியு. அதற்காகவே தேர்வு முறையை அறிமுகம் செய்துள்ளார். கணவனும் மனைவியும் தனித் தனியாகத் தேர்வு எழுத வேண்டும். 60 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியிருந்தால், அவர்களுக்கு விவாகரத்து விண்ணப்பம் வழங்கப்படுகிறது. குறைவாக மதிப்பெண்கள் பெற்றால், அவர்கள் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சேர்ந்து வாழ வேண்டியதுதான். இந்தத் தேர்வில் கோடிட்ட இடங்களை நிரப்புதல், குறு வினாக்கள், சிறிய கட்டுரை என்று 3 பகுதிகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாள், பிடித்த உணவுகள், திருமண நாள், அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள், இணையின் நல்ல விஷயங்கள், தீய விஷயங்கள், திருமணம், குடும்பம் என்பது குறித்து உங்களது கருத்துகள் போன்ற கேள்விகள் இடம்பெறுகின்றன. தேர்வு எழுதியவுடன் அந்தத் தாளை வாங்கி, இருவர் முன்பும் நீதிபதி படித்துக் காட்டுவார். சரியான விஷயத்தைக் கோடிட்டுக் காட்டி, அவர்கள் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கிறார்கள் என்பதைப் புரிய வைப்பார். இதன்மூலம் நிறைய தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்வதாகச் சொல்லிவிடுகிறார்கள். இதையும் மீறி விவாகரத்து வேண்டும் என்பவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

“எங்கள் நீதிமன்றத்துக்கு குடும்ப வழக்குகள்தான் அதிகம் வருகின்றன. அதிலும் விவாகரத்து கேட்டு வருகிறவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சின்னச் சின்னப் புரிதல்களில்தான் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. இந்தத் தேர்வு அதைப் புரிய வைக்கும். குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் விவாகரத்து விண்ணப்பம் என்றால் வேண்டுமென்றே தவறாக எழுதுவார்கள். அதனால்தான் 60 மதிப்பெண்கள் இலக்கு வைத்தேன். செப்டம்பர் 14 அன்று ஒரு தம்பதி தேர்வு எழுத வந்தனர். 80, 86 மதிப்பெண்களைப் பெற்றனர். இதுவரை தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் நீங்கள். நல்ல புரிதல் இருக்கிறது. நீங்கள் ஏன் விவாகரத்து செய்ய வேண்டும் என்று கேட்டேன். உடனே இருவரும் சேர்ந்து வாழ்வதாகச் சொன்னார்கள். கணவனுக்குக் கொஞ்சம் சூதாட்டத்தில் ஆர்வம். மற்றபடி நல்லவர். அவருக்கு தனியாக அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன். தேர்வு வைப்பதன் மூலம் விவாகரத்துகளின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்திருக்கிறது” என்கிறார் வாங் ஷியு. இந்த விஷயம் சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. விவாகரத்து என்பது அவரவர் சொந்த விஷயம், இதில் நீதிபதி தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்ப்பும் கணிசமாகக் கிளம்பியிருக்கிறது.

விவாகரத்துக்கு பரீட்சை வைக்கும் நீதிமன்றம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x