Published : 23 Sep 2017 09:51 AM
Last Updated : 23 Sep 2017 09:51 AM

தீவிரவாதத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது பாகிஸ்தான்: ஐ.நா. சபையில் இந்தியா கருத்து

‘‘தீவிரவாதத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது’’ என்று ஐ.நா. பொது சபையில் இந்தியப் பிரதிநிதி கூறியுள்ளார்.

ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி பேசினார். அப்போது காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தீவிரவாதத்தை தூண்டி விடுவதாகக் குற்றம் சாட்டினார். இதற்கு இந்தியா சார்பில் நேற்று பதில் அளிக்கப்பட்டது.

இந்திய பிரதிநிதி ஈனம் கம்பீர் நேற்று ஐ.நா. சபையில் பேசிய தாவது:

குறைந்த கால வரலாற்றை கொண்டுள்ள பாகிஸ்தான், புவி யியல் ரீதியாக தீவிரவாதத்துடன் தொடர்பு உள்ளதாக பெயர் பெற்றுள்ளது. அந்த நாட்டை ‘டெரரிஸ்தான்’ என்றுதான் கூற வேண்டும். தீவிரவாதத்தை உற்பத்தி செய்து சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் உள்ளது. முழு அளவில் தீவிரவாத நாடாகவே உள்ளது.

ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட லஷ்கர் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத், தற்போது அரசியல் கட்சி தொடங்கி அதிகாரப்பூர்வ தலைவராவதை சிறந்த உதாரணமாகக் கூறலாம்.

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளிக்கிறது. ஒசாமா பின்லேடன், முல்லா ஓமர் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்தது. பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு கொள்கை என்பது, பயங்கரவாதிகளைப் பாதுகாத்து அரசியல் ரீதியாக அவர்களைப் பகிரங்கமாக நடமாட விடுவதுதான். தீவிரவாதத்தை வளர்த்துவிட்டதற்கான விலையை தற்போது பாகிஸ்தான் கொடுத்து கொண்டிருக்கிறது.

ஆனால், காஷ்மீர் பிரச்சினையை கிளப்பி திசை திருப்பும் சூழ்ச்சியை பாகிஸ்தான் தொடர்ந்து கையாளுகிறது. இதை அண்டை நாடுகள் எல்லாம் நன்கு புரிந்து கொண்டுள்ளன.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். இதை பாகிஸ்தான் புரிந்துகொண்டு தலையிடாமல் இருக்க வேண்டும். எல்லை மீறி தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டாலும், எல்லாவற்றையும் சமாளிக்கும் திறமை இந்தியாவுக்கு உள்ளது.

இவ்வாறு ஐ.நா. பொது சபையில் இந்திய பிரதிநிதி ஈனம் கம்பீர் பேசினார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x