Published : 05 Jul 2014 08:00 AM
Last Updated : 05 Jul 2014 08:00 AM

குளிர்காலத்தில் பிறக்கும் ஆண்கள் இடது கை பயன்பாட்டாளர்கள்- ஆய்வில் ருசிகரத் தகவல்

குளிர்காலத்தில் பிறந்த ஆண்களில் பெரும்பாலானோர் இடது கையை அதிகமாகப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களான உல்ரிச் ட்ரான், ஸ்டீபன் ஸ்டீகர் மற்றும் மார்டின் வொராசெக் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வு குறித்து அவர்கள் கூறியதாவது:

மனிதர்கள் தங்கள் தினசரி நடவடிக்கைகளை பெரும்பாலும் வலது கையைப் பயன்படுத்தியே மேற்கொள்கிறார்கள்; அல்லது வலதுகையைக் கொண்டு பயன்படுத்துகிற விதத்தில் தான் பெரும்பாலான பொருட்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. உலகில் 90 சதவீதம் மனிதர்கள் வலதுகையைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள். வெறும் 10 சதவீத மக்கள் மட்டுமே இடது கையைப் பயன்படுத்துகிறார்கள்.

இதற்கான காரணத்தை அறிய நாங்கள் ஓர் ஆய்வை மேற்கொண்டோம். அதற்காக ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனி நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்ட 13,000 பேரிடம் ஆய்வுகளை மேற்கொண்டோம். இந்த ஆய்வில், 7.5 சதவீத பெண்களும் 8.8 சதவீத ஆண்களும் இடது கையைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் என்று தெரியவந்தது.

இடது கையைப் பயன்படுத்துவதில் அதிக அளவு ஆண்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய குளிர்கால மாதங்களில் பிறந்ததுதான். பிப்ரவரி முதல் அக்டோபர் மாதம் வரைக்கும் பிறந்த இடது கையைப் பயன்படுத்தும் பழக்கம் உடைய ஆண்களின் எண்ணிக்கை சராசரியாக 8.2 சதவீதமாக இருந்தால், இந்த எண்ணிக்கை நவம்பர் முதல் ஜனவரி மாதங்களுக்கிடையில் 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நவம்பர் முதல் ஜனவரி மாதங்களுக்கிடையில் தோன்றும் இருள் இடது கையைப் பயன்படுத்துவதில் எந்தத் தாக்கமும் ஏற்படுத்துவதில்லை. மாறாக, மே முதல் ஜூலை மாதங்களுக்கிடையில் உள்ள வெளிச்சமே இதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

1980-ம் ஆண்டு அமெரிக்க நரம்பியல் நிபுணர்களான நார்மன் கெஷ்விண்ட் மற்றும் ஆல்பெர்ட் கலபுர்டா ஆகியோர், ‘கருவில் குழந்தை வளரும்போது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதால் சிசுவின் இடது மூளைப் பகுதி முதிர்வடைவதற்குத் தாமதமாகிறது. இந்த சுரப்பியின் அளவு வெளிச்சம் அதிகமாக இருக்கும் நாட்களில் அதிகமாகச் சுரக்கும். அதன் காரணமாக கைகளைப் பயன்படுத்துவதில் தாக்கம் ஏற்படுத்தலாம்’ என்று கருதினர்.

ஆனால் இந்த பருவகால மாறுதல்கள் ஆண்களை மட்டுமே பாதிக்கிறதா அல்லது பெண்களை மட்டுமே பாதிக்கிறதா அல்லது இருவரையுமே பாதிக்கிறதா என்பது குறித்து சந்தேகம் இருந்து வந்தது.

எங்களின் ஆய்வு மூலம், இந்த பருவகால மாறுதல்கள் இடது அல்லது வலது கையைப் பயன்படுத்துவதில், சிறிய அளவில் ஆனால் வீரியமிக்க தாக்கத்தை ஆண்களிடம் மட்டுமே ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும், மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடிய ஒன்றாகவும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x