அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு: விரைவில் சரணடைவார் எனத் தகவல்

ட்ரம்ப் | கோப்புப் படம்
ட்ரம்ப் | கோப்புப் படம்
Updated on
2 min read

மான்ஹாட்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி கிரிமினல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதனால் அவர் கைதாகும் சூழல் எழுந்துள்ளது. இருப்பினும் கைதைத் தவிர்க்க ட்ரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

76 வயதான டொனால்ட் ட்ரம்ப் தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க பான் ஸ்டார் ஸ்டோமி டேனியல்ஸ்க்கு 1,30,000 டாலர் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் அவர் அந்தத் தொகையை 2016 தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து கொடுத்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த குற்றசாட்டின் பேரில் டொனால்ட் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டை மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி முன்வைத்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

முன்னதாக இந்த வழக்கு அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் விசாரணையில் இருந்து வந்தது. அப்போது, ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன் திடீரென இந்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக சாட்சியளித்தார். மேலும் நடிகைக்குப் பணம் வழங்கியதிற்கான ஆதாரத்தையும் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கைப்பற்றியது. இதனால் ட்ரம்ப்புக்கு நெருக்கடி வலுத்தது.

கைதாகிறாரா ட்ரம்ப்? கிரினிமல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் ட்ரம்ப் ஒன்று சரணடைய வேண்டும் இல்லாவிட்டால் அவரை போலீஸார் கைது செய்வார்கள் என்று தெரிகிறது. ட்ரம்ப் தற்போது ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கிறார். அவர் இந்த வழக்கின் நிமித்தமாக நியூயார்க் வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கைதைத் தவிர்க்க ட்ரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னரே, ஒருவேளை போலீஸாரால் ட்ரம்ப் கைது செய்யப்பட்டால் அந்த நிகழ்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது நினைவுகூரத்தக்கது.

சர்ச்சைகளின் நாயகர் ட்ரம்ப்: கடந்த 2020 நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகளின்போது நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 306 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ட்ரம்புக்கு 232 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ட்ரம்பின் ஆதரவாளர்கள், நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டோல் கட்டிடத்தை முற்றுகையிட்டனர். அவர்களில் பலர் துப்பாக்கிகளை வைத்திருந்தனர். சிலர், சுவர் வழியாக ஏறி செனட் அவைக்குள் நுழைந்து எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்தினர். இது அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றின் கறுப்பு தினமாக விமர்சிக்கப்பட்டது. அத்தனை வன்முறைகளையும் ட்ரம்ப் தூண்டிவிட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன.

அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு ட்ரம்ப்பின் ஃப்ளோரிடா வீட்டில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும்போது தன்னுடன் சில ஆவணங்களைக் கொண்டு சென்றதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்றது. அமெரிக்க முன்னாள் அதிபர் வீட்டில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது அதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in