Published : 31 Mar 2023 08:22 AM
Last Updated : 31 Mar 2023 08:22 AM
புதுடெல்லி: அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் கரோனா தடுப்பு மாத்திரையை உட்கொண்டவர்களுக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான பைசர், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் பாக்ஸ்லோவிட் என்ற பெயரில் கரோனா தடுப்பு மாத்திரையை அறிமுகம் செய்தது. இந்த மாத்திரை தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் 30 பாக்ஸ்லோவிட் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. 30 மாத்திரைகளின் விலை ரூ.46,000 ஆகும். ஆரம்ப காலத்தில் பாக்ஸ்லோவிட் மாத்திரைகள் நல்ல பலன் அளிப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த யூனிவர்சிட்டி ஆப் மினசோட்டா மற்றும் யூனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா சான் டியாகோவை சேர்ந்த விஞ்ஞானிகள், பாக்ஸ்லோவிட் மாத்திரைகள் குறித்து ஆய்வு செய்து தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவற்றின் சாரம்சம் வருமாறு:
பாக்ஸ்லோவிட் மாத்திரை உட்கொண்ட கரோனா நோயாளிகளுக்கு இயற்கையான எதிர்ப்பு சக்தி உருவாவது குறைகிறது. இதன் காரணமாக இந்த மாத்திரை உட்கொண்ட நோயாளிகளுக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.
பாக்ஸ்லோவிட் மாத்திரைகளை எதிர்க்கும் வீரியத்தை கரோனா வைரஸ் பெற்றிருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளை ஆய்வு செய்தபோது இது உறுதி செய்யப்பட்டது.
கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி கொண்டே இருக்கிறது. எனவே பல்வேறு மருந்துகளின் கூட்டுக் கலவை மூலம் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பரிசீலிக்கலாம். குறிப்பாக எச்ஐவி, ஹெபாடிடிஸ் சி வைரஸ் சிகிச்சைக்கு தற்போது பயன்பாட்டில் உள்ள மருந்துகளை பயன்படுத்தி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். இவ்வாறு ஆய்வறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT