

மியான்மரில் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் நடந்த வன்முறை சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியுள்ளது என்று மியான்மரின் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிவிப்பாளர் யாங்கி லீ கூறியுள்ளார்.
மியான்மரில் பவுத்த மதத்தினருக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாத இறுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு ராக்கைன் மாகாண பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதில் பலர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் மியான்மர் நிலவரம் குறித்து மியான்மரில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிவிப்பாளர் யாங்கி லீ பங்கேற்ற நேர்காணல் விவரம்,
மியன்மரில் நடந்து வரும் வன்முறை காரணமாக இதுவரை இடப்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை?
கடந்த வெள்ளிக்கிழமைவரை 30,000 பேர் மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு இடப்பெயர்ந்துள்ளனர். 20,000 பேர் மியான்மர் - வங்கதேசம் எல்லையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
மக்கள் நதி வழியே வெளியேறினார்களா?
ஆம். நதி மற்றும் மலைப் பகுதி வழியாக மக்கள் வெளியேறி இருக்கிறார்கள். ஆனால் வெளியேறியவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.
அப்படி என்றால் வெளியேறிவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக் கூடும் அல்லவா?
ஆமாம், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மியான்மரில் கலவரம் ஏற்பட்ட போது, சுமார் 70,000 - 75,000 பேர்வரை 2-3 மாதத்தில் வங்கதேசத்துக்கு இடப்பெயர்ந்தார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலை மிக மோசமாக உள்ளது. ஒருவராத்தில் மட்டும் 50,00 பேர் வரை இடப்பெயர்ந்துள்ளனர்.
வன்முறையில் எத்தனை பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்?
எங்களுக்கு தெரிந்தவரை ஆகஸ்ட் 25-ம் தேதி நடந்த வன்முறையில் 14-15 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 150 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதனை உறுதிப்படுத்துவது கடினம்.
ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறதே?
இருக்கலாம். மனித உரிமை அமைப்பு பார்த்த செயற்கை கோள் படங்களின் அடிப்படையில் பார்த்தால் சிலர் மட்டும் கொல்லப்பட்டுள்ளதை நான் ஏற்றுகொள்ளவில்லை. ஏனெனில் ராக்கைன் பகுதி சுமார் 100 கிலோமீட்டர்வரை தீயிட்டு எரிக்கப்பட்டுருந்தது. ஆனால் மியான்மர் அரசாங்கம் அளித்த அறிக்கையில் 50 - 100 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது. கொல்லப்பட்டது கிளர்ச்சியாளர்களா? பொது மக்களா? என்று எங்களுக்குத் தெரியவில்லை.
எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளார்கள்?
நாங்கள் அதனை கண்டறிய முயற்சி செய்து வருகிறோம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.