

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில் ஏற்பட்ட சர்ச்சை, ஒரு கடந்த கால விஷயம். அதைப் பற்றி இப்போது பேச வேண்டியதில்லை. அவருக்கு விசா வழங்க இயலும் என்பதை அறிந்த பின்புதான், அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் (தெற்கு, மத்திய ஆசியப் பிரிவு) நிஷா தேசாய் பிஸ்வால் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியதாவது: “இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். மோடிக்கு விசா வழங்க இயலும் என்பதை அறிந்துகொண்டுதான் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பரில் அமெரிக்காவுக்கு மோடி வருகை தர உள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.
விசா விஷயத்தில் நாங்கள் ஏற்கெனவே கூறிய கருத்தில் மாற்றமில்லை. யார் விண்ணப் பித்தாலும், அதை சட்டவிதிமுறை களின்படி பரிசீலிப்போம் என்றுதான் கூறினோம்” என்றார்.
அப்போது எம்.பி. ஜார்ஜ் ஹோல்டிங், “மத வன்முறைக்கு காரணமாக இருந்ததாகக் கூறி கடந்த 2005-ம் ஆண்டு மோடிக்கு விசா மறுக்கப்பட்டதே” என்று சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதில் அளித்த நிஷா தேசாய், “2005-க்கு பிறகு அவரிடம் இருந்து விசா கேட்டு எந்தவொரு விண்ணப்பமும் வரவில்லை. எனவே, அவரது மனுவை மறுபரிசீலனை செய்யவும், புதிய முடிவு எடுப்பதற்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.
இப்போது மோடி அமெரிக்கா வர அழைப்பு விடுத்துள்ளோம். அவரை வரவேற்க தயாராகி வரும் நிலையில், முந்தைய விஷயங்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதுகிறோம்.
இணைந்து செயல்படுவோம்
இந்தியா தனது வர்த்தக்க நடவடிக்கைகளுக்கு கூடுதல் ஊக்கம் அளிக்க வேண்டும். அப்போதுதான், ஆசிய மற்றும் உலக அரங்கில் சக்திவாய்ந்த நாடாக வளர முடியும். இந்திய பிரதமர் மோடியின் திட்டங்கள், முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவுக்கு அமெரிக்க நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆதரவு உதவிகரமாக அமையும்.
இந்தியாவுக்கும், அமெரிக் காவுக்கும் இடையே பொதுவான குறிக்கோள்கள் உள்ளன. இரு நாடுகளும் இணைந்து செயல் பட்டால், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
ராணுவ தளவாட உற்பத்திக்கும், அதனை நவீனப்படுத்துவதற்கும் இந்தியா முக்கியத்துவம் அளிக்கவுள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப் போகிறது.
அமெரிக்காவில் இந்தியா செய்து வரும் முதலீடுகள் காரணமாக இங்கு 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள் ளன. இரு வழிகளிலும் வர்த்தக நடவடிக்கைகளை வலுப்படுத் துவதன் மூலம் இருநாடுகளும் பலனடைய முடியும்.
உயர் கல்வித்துறைக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அமெரிக்க பல்கலைக்கழகங்கள், இந்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார் நிஷா தேசாய்.