Published : 28 Mar 2023 09:45 AM
Last Updated : 28 Mar 2023 09:45 AM

அமெரிக்க துப்பாக்கிச் சூடு | கைப்பற்றப்பட்ட மேப், சதி குறிப்பு; மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நாஷ்வில் பகுதியில் திங்கள்கிழமை பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 குழந்தைகள் மற்றும் மூன்று பள்ளி ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் படுகொலையில் ஈடுபட்ட நபர் குறித்த பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டென்னிசி மாகாணத்தின் தலைநகரான நாஷ்வில்லில் உள்ள தொடக்கப் பள்ளியில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் தவிர பள்ளி ஊழியர்கள் 3 பேரும் உயிரிழந்ததை நாஷ்வில் நகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் போலீஸாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஜான் டிரேக் கூறுகையில், "கொடுமையான இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நடத்தியவர் அடையாளம் தெரியவந்துள்ளது. ஆட்ரி ஹேல் என்ற 28 வயது மூன்றாம் பாலினத்தவர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். அந்த நபர் அவரது லிங்க்ட் இன் புரொஃபைலில் தன்னை அண் என்று அவர் அடையாளப்படுத்தியிருந்தார். அதனால் சிறு குழப்பம் நிலவியது. இப்போது அவர் மூன்றாம் பாலினத்தவர் என்பது உறுதியாகியுள்ளது.

அவரிடமிருந்து சதித்திட்டக் குறிப்புகள், பள்ளியின் வரைபடம், போலீஸ் சுற்றிவளைத்தால் எப்படி எதிர்கொள்வது எனப் பல்வேறு விவரங்கள் அடங்கிய குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் அவர் இந்தப் பள்ளியில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலும் தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.

அந்த நபரிடமிருந்து 2 ரைஃபிள் துப்பாக்கிகள், ஒரு கைத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளன. ஹேல் பள்ளியின் பக்கவாட்டு வாயில் வழியாக நுழைந்துள்ளார். இறந்துபோன 3 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வயது 6, இன்னொரு குழந்தைக்கு வயது 9. உயிரிழந்த மூன்று பெரியவர்களும் 60 முதல் 61 வயது கொண்டவர்கள். அவர்களில் கேத்தரின் கூன்ஸ் என்பவர் பள்ளியின் தலைவர் என்பது தெரியவந்துள்ளது" என்றார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவது அதுவும் குறிப்பாக பள்ளிகளில் நடப்பது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில், "இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமும், தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கி வன்முறைகளும் தேசத்தின் ஆன்மாவை கிழிக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றம் விரைவில் துப்பாக்கி தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்" என்றார். அமெரிக்காவில் கடந்த ஆண்டில் (2022) மட்டும் துப்பாக்கி தொடர்பான வன்முறையில் 44,000 பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x