உலகில் நிலைத்தன்மையை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் பங்களிக்கின்றன: மோடி பேச்சு

உலகில் நிலைத்தன்மையை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் பங்களிக்கின்றன: மோடி பேச்சு
Updated on
1 min read

உறுதித் தன்மையற்றதாய் நகரும் உலகில் வலிமையான நிலைத்தன்மையை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் பங்களிக்கின்றன என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 9-வது உச்சி மாநாடு சீனாவின் புஜியான் மாவட்டம் ஜியாமென் நகரில் நேற்று தொடங்கியது.

இந்நிலையில் ஜியமென் நகரில் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மோடி பேசும்போது, "உறுதியற்ற தன்மையை நோக்கி நகரும் உலகில் வலிமையான நிலைத்தன்மையை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் பங்களிப்பு செய்கின்றன. விவசாயம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், விளையாட்டு, தகவல் தொழில் நுட்பம் என பல்வேறு துறைகளில் நாம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.

புதிய கண்டுபிடிப்புகள், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளின் வலுவான கூட்டணி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். வறுமை ஒழிக்கப்பட்டு, சுகாதாரம், சுகாதாரம், திறமை, உணவு பாதுகாப்பு, பாலின சமத்துவம், ஆற்றல் கல்வி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக சிறந்த திட்ட வழிமுறைகள் தேவை" என்றார்.

பிரிக்ஸ் மாநாட்டின்  தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமையன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசும் போது, ''ஒரு நாட்டின் வளர்ச்சி மாதிரி, கவலை ஆகியவற்றுக்கு பரஸ்பரம் நம்பிக்கை அடிப்படையில் நாம் உரிய மதிப்பு அளிக்கிறோம். வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் நமக்குள் வேறுபாடு இருக்கலாம். இதுதவிர வேறு சில பிரச்சினைகளிலும் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அத்தகைய கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நமது இலக்கை அடைய முடியும்" என்றார்.

பிரிக்ஸ் மாநாடு முடிந்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தனியாக சந்தித்துப் பேச உள்ளார்.

மோடி - புதின் சந்திப்பு:

மேலும் இந்த மாநாட்டில் உலகளாவிய பிரச்சினைகள், பிராந்திய தன்மைகள், ரஷ்ய - இந்தியாவுக்கிடையே நிகழும் உறவு குறித்து பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் இருவரும்  சந்தித்து பேசியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in