19 ஆண்டுகளுக்கு பிறகு கருப்பின நடிகருக்கு எம்மி விருது

19 ஆண்டுகளுக்கு பிறகு கருப்பின நடிகருக்கு எம்மி விருது
Updated on
1 min read

அமெரிக்காவில் சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான விருதை 19 ஆண்டுகளுக்கு பிறகு கருப்பின நடிகர் ஒருவர் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களுக்கான எம்மி விருதுகள் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  எம்மி விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறந்த நடிகர்,  நடிகை, இயக்குநர், சிறந்த தொடர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

பெரும்பாலும் அமெரிக்க திரையுலகிலும் சரி, விருது நிகழ்ச்சிகளிலும் சரி வெள்ளை இன நடிகர், நடிகைகள் கைகள்தான் உயர்ந்திருக்கும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது கருப்பின நடிகர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதுவும் எம்மி போன்ற தொலைக்காட்சி தொடருக்கான விருதுகளிலும் கூட கருப்பின நடிகர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் பின்னடைவுதான். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்மி விருது நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில்  சிறந்த நடிகருக்கான விருது கருப்பின நடிகர் ஒருவருக்கு  சுமார் 19 வருடங்களுக்கு பின் வழங்கப்பட்டுள்ளது.

’திஸ் இஸ் அஸ்’ என்ற அமெரிக்க நாடகத் தொடரில்  நடித்த ஸ்டெர்லிங் கே. பிரவின் இந்த விருதினை பெற்றுள்ளார். கடைசியாக  இந்த விருதை 1998 ம் ஆண்டு  கருப்பின நடிகரானஆண்டிரி ப்ராகர் பெற்றிருந்தார்.

விருது பெற்றது குறித்து ஸ்டெர்லிங்  பிரவின் கூறும்போது, "ஆண்டிரி ப்ராகரின் பாதையில் நானும் இந்த விருதை பெற்றுள்ளது எனக்கு மிகுந்த கவுரத்தை அளித்துள்ளது. எனது மனைவிக்கு  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

எம்மி விருது பெற்ற ஸ்டெர்லிங்  பிரவின் இந்த விருதை ஆண்டிரி ப்ராகருக்கு அர்ப்பணித்தது அரங்கத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in