

ஜப்பானின் வடகிழக்கு பசிபிக் கடற்கரையில் அமைந்துள்ள மியாகி மாகாணத்தில் சனிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சிறிய அளவில் சுனாமி அலை தாக்கியது. அதிகாலை 4.22 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 அலகுகளாக பதிவானதாகவும் தலைநகர் டோக்கியோவிலிருந்து கிழக்கு, வடகிழக்கு பகுதியில் 284 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, புகுஷிமா அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதி, மியாகி, ஐவேட் ஆகிய மாகாணங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. வழக்கத்தை விட ஒரு மீட்டர் அளவுக்கு அலைகள் எழும் என்றும் கடலோரப் பகுதிகளில் இருப்பவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறுமாறும் எச்சரிக்கப்பட்டனர். இதன்படி, சனிக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 5.12 மணிக்கு இஷினோமகி என்ற இடத்தில் 20 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டோக்கியோ மின்சக்தி மையங்களை இயக்கும் டெப்கோ நிறுவன செய்தித் தொடர்பாளர் மசாஹிரோ அசோகா கூறும்போது, “நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு மின் உற்பத்தி மையங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை” என்றார்.
ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலை ஏற்பட்டதால் 18 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அத்துடன் புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டது.