Published : 16 Jul 2014 11:10 AM
Last Updated : 16 Jul 2014 11:10 AM

கூடங்குளத்துக்கு வருமாறு ரஷ்ய அதிபருக்கு மோடி அழைப்பு

டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஷ்யாவுடனான பாதுகாப்பு, அணு சக்தி, எரிசக்தி துறை ரீதியான உறவை விரிவுபடுத்தி, இரு நாடுகளும் கூட்டாளியாக செயல்பட வேண்டும் என்றும் மோடி விருப்பம் தெரிவித்தார்.

பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துப் பேசினார்.

மதிப்பு வாய்ந்த நட்பு

இந்த சந்திப்புக்குப் பிறகு ட்விட்டர் இணையதளத்தில், ‘இந்தியா ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து புதினிடம் பேசினேன். ரஷ்யாவுடனான நட்பை மிகவும் மதிப்பு வாய்ந்ததாக நாங்கள் கருதுகிறோம்’ என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

இருவரின் சந்திப்பு தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மோடியை சந்தித்த புதின், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானதற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

பல்வேறு விவகாரங்களில் ஒரே கருத்துடன் இணைந்து கூட்டாளிகளாய் செயல்படும் இந்தியா ரஷ்யா நட்புறவை விரிவுபடுத்த புதின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.

விசா வழங்கும் நடைமுறை

பாதுகாப்பு, அணுசக்தி, எரிசக்தி, வானியல், வர்த்தகம் ஆகிய துறைகளில் மேலும் நட்புறவை விரிவுபடுத்தி வலுப்படுத்த இந்தியாவுக்கு பொறுப்பு உள்ளது. ரஷ்யாவுக்கு செல்வோரின் விசாவை, குறிப்பாக மாணவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்.

இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நடைபெறும் வருடாந்திர சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்க டிசம்பர் மாதம் டெல்லி வரும்போது, அணு மின் நிலைய கட்டுமானம் நடைபெறும் பகுதியை புதின் பார்வையிட வேண்டும். என்று மோடி தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் யோசனையை ஏற்றுக்கொண்ட புதின், “இந்தியாவுடனான நட்புறவை மிகவும் உயர்ந்ததாக ரஷ்யா கருதுகிறது. அணுசக்தி திட்டங்கள், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை பிரதிபலிப்பதாக உள்ளன” என்று தெரிவித்தார்.

கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் ரூ.17,200 கோடி செலவில் 2 அணு உலைகள் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதல் அணு உலை சில மாதங்களுக்கு முன்பு மின் உற்பத்தியைத் தொடங்கியது. இரண்டாவது அணு உலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அணு உலையில் நடைபெறும் பணிகளை பார்வையிடத்தான் புதினை மோடி அழைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இது தவிர மேலும் 2 அணு உலைகளை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x