Published : 07 Sep 2017 10:21 AM
Last Updated : 07 Sep 2017 10:21 AM

பிரதமர் நரேந்திர மோடி, ஆங் சான் சூகி முன்னிலையில் இந்தியா, மியான்மர் இடையே 11 ஒப்பந்தங்கள்: ராக்கைன் மாகாண வன்முறைக்கு சுமுக தீர்வு காண வலியுறுத்தல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மியான்மர் ஆலோசகர் ஆங் சான் சூகி முன்னிலையில், நேற்று 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

சீன பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாலை மியான்மர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டு அதிபர் தின் கியாவை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கிடையே உள்ள தொன்மைமிக்க உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த மாத இறுதியில் கலவரம் ஏற்பட்டது. இதனால் சுமார் 1.25 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். நேற்று கூட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உயிரிழந்தனர். வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக அந்நாட்டு அரசை சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டி உள்ளன.

இந்நிலையில் மியான்மர் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று அந்நாட்டு அரசின் அதிகாரம் மிக்கவரும் ஆலோசகருமான ஆங் சான் சூகியை சந்தித்துப் பேசினார். பின்னர் இரு நாடுகளுக்கிடையே, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மியான்மர் ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்துவது, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

மியான்மர் அரசு எதிர்கொள்ளும் பிரச்சினையை இந்தியா புரிந்து கொள்கிறது. குறிப்பாக, ராக்கைன் மாகாணத்தில் நிகழ்ந்த வன்முறைக்கு அப்பாவி மக்களும் ராணுவத்தினரும் பலியாகி உள்ளனர். இதனால் மியான்மர் அரசுக்கு ஏற்பட்டுள்ள கவலையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது.

மியான்மரின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பு அளிக்கக்கூடிய வகையில் சுமுகத் தீர்வு காண வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் வன்முறையை கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். இந்தியாவுக்கு வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா வழங்கப்படும்.

பக்கத்து நாடுகளாக உள்ள இந்தியாவும், மியான்மரும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே, கடல்சார் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் ஆங் சான் சூகி கூறும்போது, “மியான்மர் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நிலையில், உறுதுணையாக இருந்து வரும் இந்தியாவுக்கு நன்றி” என்றார்.

சூகிக்கு மோடி பரிசு

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆங் சான் சூகி டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் அரசியல் அறிவியல் பயின்றார். பின்னர் கடந்த 1986-ம் ஆண்டு சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடி கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்தார்.

அப்போது அவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையின் பிரதியை அவருக்கு பரிசளித்தேன்” என பதிவிட்டுள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x