Published : 17 Mar 2023 04:38 PM
Last Updated : 17 Mar 2023 04:38 PM

சீன அதிபர் மார்ச் 20-ல் ரஷ்யா பயணம்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி

ரஷ்ய அதிபருடன் சீன அதிபர் - கோப்புப் படம்

பெய்ஜிங்: மூன்று நாள் பயணமாக வரும் திங்கள்கிழமை ரஷ்யா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியதன் ஓராண்டு நிறைவை ஒட்டி சீன அரசு தரப்பில் கடந்த மாதம் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், முழுமையான போர் நிறுத்தத்தை அமல்படுத்த இரு தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அனைத்து நாடுகளின் இறையாண்மையும் மதிக்கப்பட வேண்டும் என்பதை சீனா ஆதரிக்கிறது என்பதாக ஒரு நிலைப்பாட்டையும், ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மேற்கத்திய நாடுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்பதாக ஒரு நிலைப்பாட்டையும் அந்த அறிக்கையில் சீனா வெளிப்படுத்தி இருந்தது.

உக்ரைன் போரில் நம்பகமான நடுநிலையாளராக சீனா இருக்க முடியாது என்றும், ஏனெனில் அது ரஷ்யாவுடன் எல்லையற்ற நெருங்கிய உறவை கொண்டிருக்கிறது என்றும் மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் இந்தக் குற்றச்சாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மூன்று நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் திங்கள்கிழமை ரஷ்யா செல்கிறார். இது குறித்து பெய்ஜிங்கில் இன்று (மார்ச் 17) செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங், ''ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அழைப்பை ஏற்று அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா செல்ல உள்ளார். வரும் 20-ம் தேதி ரஷ்யா செல்லும் அதிபர், வரும் 23-ம் தேதி அங்கிருந்து சீனாவுக்கு திரும்ப இருக்கிறார்'' என தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர புடினுக்கு ஜி ஜின்பிங் அழுத்தம் கொடுப்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஹூவா சுன்யிங், ''பேச்சுவார்த்தைதான் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்பதில் சீனா நம்பிக்கை கொண்டிருக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.

சீன அதிபராகவும், சீன ராணுவத்தின் தலைவராகவும் மேலும் 5 ஆண்டுகள் ஜி ஜின்பிங் தொடர சீன கம்யூனிஸ்ட் கட்சியும், அந்நாட்டு நாடாளுமன்றமும் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தன. இதை அடுத்து ஜி ஜின்பிங் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x