Published : 14 Mar 2023 01:21 PM
Last Updated : 14 Mar 2023 01:21 PM
வாஷிங்டன்: வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட சிக்நேச்சர் வங்கியும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் பங்கு விலையும் கடுமையாக சரிந்தது. இதனால் இந்த வங்கி நேற்று முன்தினம் மூடப்பட்டது.
இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதிஅமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. மேலும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தொடர் நிகழ்வு அமெரிக்க வங்கி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவை பொறுத்தவரை அதன் வங்கிகள் பாதுகாப்பாகவே உள்ளன. எனினும் பெரிய வங்கிகளின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் வரும் நாட்களில் நிச்சயம் மேம்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகளால் இனி இந்த நிலை ஏற்படாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர். ஏன் இந்த நிகழ்வு நடந்தது...? அமெரிக்கர்களுக்கு இனி இவ்வாறு நடக்காது என்று உறுதியளிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்காமல் ஜோ பைடன் புறக்கணித்துவிட்டார். வங்கிகள் திவால் விவகாரம் ஜோ பைடன் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT