

பாகிஸ்தானில் குஜ்ரன்வாலா பகுதியில் வசிக்கும் அகமதி பிரிவைச் சேர்ந்த இளைஞர், பேஸ்புக்கில் மதத்தை அவதூறு செய்து கருத்து வெளியிட்டதால் ஞாயிற்றுக் கிழமை இரவு கலவரம் ஏற்பட்டது. இதில், 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானில் வசிக்கும் அகமதி பிரிவைச் சேர்ந்தவர்கள், தங்களை முஸ்லிம்கள் என்று கூறி வருகின்றனர். ஆனால், அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று 1984-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அந்நாடு அறிவித்துள்ளது.
இந்நிலையில், குஜ்ரன்வாலா பகுதியில் வசிக்கும் அகமதி பிரிவைச் சேர்ந்த இளைஞர், மத அவதூறு கருத்துகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதாகக் குற்றம்சாட்டி அவரை மற்றொரு பிரிவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இரவு தட்டிக் கேட்டுள்ளார்.
பின்னர் 150-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள காவல் நிலையத்துக்குச் சென்று, அவதூறான கருத்துகளை வெளியிட்ட இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, மற்றொரு கும்பல் அகமதி பிரிவைச் சேர்ந்த மக்களின் வீடுகள், கடைகள் மீது தாக்குதலை தொடுத்தது. வீடுகளிலிருந்த விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, வீட்டிற்கு தீவைத்தனர். மூதாட்டி ஒருவரையும், அவரின் இரு பேத்திகளையும் படுகொலை செய்தனர்.
கலவரம் நடந்த பகுதிக்கு வந்த போலீஸார், தீவைப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த முனாவர் அகமது என்பவர் தெரிவித்துள்ளார்.
கலவரம் தொடர்பாக காவல் துறை அதிகாரி கூறும்போது, “கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸாரை அனுப்பி வைத்துள்ளோம். கலவரத்துக்கு காரணமான, பேஸ்புக்கில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட இளைஞர் தாக்குதலில் இருந்து தப்பித்து பத்திரமாக உள்ளார்” என்றார்.