சீன அதிபராக ஜி ஜின்பிங் 3-வது முறையாக பதவியேற்பு

சீன அதிபராக ஜி ஜின்பிங் நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அதிபராக பதவியேற்றுக் கொண்டார். படம்: பிடிஐ
சீன அதிபராக ஜி ஜின்பிங் நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அதிபராக பதவியேற்றுக் கொண்டார். படம்: பிடிஐ
Updated on
1 min read

பெய்ஜிங்: சீனாவின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டு நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ், ஜி ஜின்பிங் தேர்வுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் சீன அதிபராக தொடர்ந்து 3-வது முறையாக ஜின்பிங் நேற்று பதவியேற்றார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோவுக்கு பிறகு 2 முறைக்கு மேல் அதிபராகியிருக்கும் முதல் தலைவர் ஜி ஜின்பிங் ஆவார். அவர் கடந்த 2012-ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது போட்டியாளர்களை ஓரங்கட்டி, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைப் பதவிகளை தனது ஆதரவாளர்களை கொண்டு நிரப்பினார்.

ஜின்பிங் கடந்த அக்டோபரில் கட்சியின் பொதுச்செயலாளராக மூன்றாவது முறையாக 5 ஆண்டு காலத்துக்கு தேர்வாகியிருந்தார். இப்பதவியை சீனத் தலைவர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிறரிடம் ஒப்படைப்பது வழக்கம். அந்தப் பாரம்பரியத்தை ஜி ஜின் பிங் உடைத்தார்.

முன்னதாக 2018-ல் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற சட்டத்தை நீக்கினார். இந்நிலையில் ஜின்பிங் தனது வாழ்நாள் முழுவதும் அதிபராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in