

பிரேசிலைச் சேர்ந்த கேப்ரிலா ஜார்டன் என்ற நீதிபதி, தன் வாழ்நாளில் இப்படி ஒரு வழக்கைச் சந்தித்ததில்லை என்கிறார். 18 வயது ராபர்ட்டோ என்ற இளைஞர் தனக்கு நினைவு தெரியும் முன்பே பிரிந்து சென்ற தன் அப்பாவின் அன்பைப் பெற்றுத் தரும்படி வழக்கு தொடுத்திருக்கிறார். “பொதுவாகப் பிரிந்து சென்றவர்களிடமிருந்து பொருளாதார உதவியைத்தான் நீதிமன்றம் அளிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. பெற்றோரின் கடமையையும் கட்டாயப்படுத்தி செய்ய வைத்திருக்கிறது. ஆனால் ராபர்ட்டோ பண உதவி எதுவும் தனக்குத் தேவை இல்லை என்கிறார். தான் 18 வயதுவரை இழந்த அப்பாவின் அன்பை, ஒட்டு மொத்தமாக அளிக்கச் சொல்லிக் கேட்கிறார். அன்பை எப்படிச் சட்டத்தால் கொடுக்கச் சொல்ல முடியும்? நானும் எவ்வளவோ ராபர்ட்டோவிடம் பேசிப் பார்த்துவிட்டேன். வேண்டாம் என்று ஒதுங்கிச் செல்பவர்களை கட்டாயப்படுத்த முடியாது என்று தெளிவுபடுத்தினேன். அன்பு செலுத்த இயலாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்பா இருந்தும் இல்லாமல் வளர்ந்த துயரம் தன்னை மிகவும் பாதித்திருப்பதாகவும் சொல்கிறார் ராபர்ட்டோ. பொருளாதார உதவியோ, பெற்றவர் என்ற கடமையோ தனக்குத் தேவை இல்லை என்கிறார். ஆனால் அவரது அப்பாவின் கண்களில் சிறிது கூட மகன் மீது பாசமோ, கருணையோ இல்லை. ராபர்ட்டோவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குச் சட்டத்தில் இடமில்லை. இந்த வழக்கை எப்படி முடிப்பது என்று குழப்பத்தில் இருக்கிறேன்” என்கிறார் கேப்ரிலா ஜார்டன். “சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவின் அன்பு வேண்டும் என்று வழக்கு தொடுத்தேன். அப்போது அப்பா என்னை அடிக்கடி சந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்றெல்லாம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அவர் ஒருமுறை கூட என்னைப் பார்க்க வரவில்லை. மிகவும் கட்டாயப்படுத்தினால் வருவதாகத் தகவல் அனுப்புவார். காத்திருந்து, காத்திருந்து ஏமாற்றமடைவேன். தொலைபேசியில் அழைத்தாலும் பேசவே மாட்டார். இப்படி இருக்கும் ஒரு மனிதரை எனக்கு வேண்டாம் என்று ஏனோ என்னால் ஒதுக்க முடியவில்லை. எனக்கு நல்ல அம்மா கிடைத்திருக்கிறார், தோழி கிடைத்திருக்கிறார். பொருளாதாரக் கஷ்டமின்றி வாழ்கிறேன். ஆனாலும் என் அப்பாவின் அன்பு கிடைக்காததுதான் எனக்குப் பெரிய இழப்பாக இருக்கிறது. பெற்றவரிடம் அன்பை எதிர்பார்ப்பது தவறா?” என்கிறார் ராபர்ட்டோ.
விசித்திர வழக்கு!
சீனாவின் குவாங்ஸொவ் பகுதியில் வசிக்கும் சியாவோ, தன் தோழியிடம் திருமணக் கோரிக்கையை வித்தியாசமாக வைக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். இவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் உணவகம், மாட்டிறைச்சி உணவுகளில் பெயர் பெற்றது. எனவே மாட்டிறைச்சியை வைத்து ஒரு பூங்கொத்து செய்து தரும்படிக் கேட்டார் சியாவோ. இறைச்சியை மென்மையான பூ இதழ்களாக மாற்றி, ரோஜா பூக்கள்போல் உருவாக்கினர். இந்தப் பூங்கொத்தைச் சுற்றிலும் இளம்பச்சை இலைகளை வைத்து, அழகான, வித்தியாசமான பூங்கொத்தாக மாற்றினர். அதை எடுத்துக்கொண்டு தோழியிடம் சென்றவர், சட்டென்று முழங்காலிட்டு திருமணம் செய்துகொள்வாயா என்று கேட்டார். மாமிசப் பூக்களைப் பார்த்ததும் ஆச்சரியமான அந்தப் பெண், உடனே சம்மதம் தெரிவித்தார்.
நல்லவேளை, சீனாவில் மாட்டரசியல் இல்லை!