தீவிரவாதத்தை எந்த வடிவத்திலும் அனுமதிக்க மாட்டோம்: பிரிக்ஸ் மாநாட்டில் வெளியிடப்பட்ட போர்டாலீஸா பிரகடனத்தில் அறிவிப்பு

தீவிரவாதத்தை எந்த வடிவத்திலும் அனுமதிக்க மாட்டோம்: பிரிக்ஸ் மாநாட்டில் வெளியிடப்பட்ட போர்டாலீஸா பிரகடனத்தில் அறிவிப்பு
Updated on
1 min read

தீவிரவாதத்தை எந்த வடிவத்திலும் அனுமதிக்க மாட்டோம் என்றும், இச்செயலை சித்தாந்த ரீதியாகவோ, மதம் மற்றும் அரசியல் ரீதியாகவோ நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரேசிலின் போர்டாலீஸா நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 6-வது மாநாடு நடைபெற்றது. இதில் பிரேசில் அதிபர் தில்மா ரூசெப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோர் பங்கேற்றனர்.

மாநாட்டின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை பிரிக்ஸ் அமைப்பு சார்பில் போர்டாலீஸா பிரகடனம் வெளியிடப்பட்டது. 17 பக்கங்கள் கொண்ட அந்த பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தீவிரவாதச் செயலுக்கு பண உதவி செய்யவோ, ஊக்குவிக்கவோ, அச்செயலில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிக்கவோ கூடாது என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். தீவிரவாதச் செயலை எதிர்க்கும் நடவடிக்கையை ஒருங்கிணைப்பதில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முக்கிய பங்குள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். தீவிரவாதத்துக்கு எதிரான ஐ.நா.வின் நிலைப்பாட்டை செயல்படுத்துவதிலும், அமல்படுத்துவதிலும் பிரிக்ஸ் அமைப்பைச் சேர்ந்த நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

இணையம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத்தை தீவிரவாதச் செயலுக்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீவிரவாதத்தை ஒடுக்க முயற்சி எடுக்க வேண்டும்.

நீடித்த வளர்ச்சியை ஊக்கப்படுத்த தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.சர்வதேச அளவிலான ஒத்துழைப்புடனும், உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறைகள் மற்றும் சட்டங்களின் மூலமும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது அவசியம். அதன் மூலம்தான் இணையத்தை பாதுகாப்பாகவும், அதே சமயம் அனைவருக்கும் இடமளிக்கத்தக்க வகையிலும் மாற்ற முடியும்.

நாடுகள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை இணையம் மூலம் உளவு பார்க்கும் செயலை கடுமையாக கண்டிக்கிறோம். தனி மனித உரிமைக்கும், நாடுகளின் இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இச்செயல் உள்ளது. சைபர் குற்றங்களை தடுப்பதில் பிரிக்ஸ் நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வழிவகைகள் ஆராயப்படும் என்றும் அந்த பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in